Home நாடு நஜிப் ஆதரவு பேரணி: அம்னோ ரத்து செய்தது! பாஸ் தொடர்கிறது!

நஜிப் ஆதரவு பேரணி: அம்னோ ரத்து செய்தது! பாஸ் தொடர்கிறது!

104
0
SHARE
Ad
அஷ்ரப் வஜ்டி டுசுக்கி

கோலாலம்பூர் : மாமன்னரின் உத்தரவு மற்றும் காவல்துறை எச்சரிக்கைகளை அடுத்து, முன்னாள் தலைவர் நஜிப் அப்துல் ரசாக்கிற்கு ஆதரவாக ஜனவரி 6-ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டிருந்த பேரணியை அம்னோ ரத்து செய்தது.

பேரணி ரத்து செய்யப்பட்டதை அறிவித்த அம்னோ, அரசியலமைப்பு விதிகளுக்கு கட்டுப்படுவதையும், யாங் டி-பெர்துவான் அகோங்கிற்கான மரியாதையை உறுதிப் படுத்துவதையும் அம்னோ தலைமைச் செயலாளர் அஷ்ரப் வஜ்டி டுசுகி வலியுறுத்தினார்.

எஞ்சிய சிறைத் தண்டனையை வீட்டுக் காவலில் நஜிப் அனுபவிக்க அனுமதிக்கும் முன்னாள் மாமன்னரின் உத்தரவு தொடர்பான நீதிமன்ற விசாரணையில் கலந்து கொள்ளவிருந்த முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கிற்கு ஆதரவாக ஜனவரி 6-ஆம் தேதி நடத்த திட்டமிட்ட பேரணியை அம்னோ ரத்து செய்துள்ளது.

#TamilSchoolmychoice

“அம்னோ ஒருபோதும் அரசியலமைப்புக்கு எதிராக செயல்படாது. யாங் டி-பெர்துவான் அகோங் அவர்களால் உத்தரவிடப்பட்ட அனைத்து விதிகள் மற்றும் சட்டங்களையும் மதிப்பதில் உறுதியாக உள்ளது. மாமன்னரின் உத்தரவை நிலைநாட்டும் கொள்கைக்கு ஏற்ப – காவல்துறைத் தலைமை அதிகாரியின் உத்தரவை பின்பற்றி, ஜனவரி 6, 2025 அன்று திட்டமிடப்பட்ட பேரணியைத் தொடர வேண்டாம் என அம்னோ முடிவு செய்துள்ளது. நஜிப்புக்கு முழு நீதி வழங்குவதில் யாங் டி-பெர்துவான் அகோங் அவர்களின் அறிவாற்றலில் அம்னோ முழு நம்பிக்கை வைத்துள்ளது,” என்று அம்னோ பொதுச் செயலாளர் அஷ்ரப் வஜ்டி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

அரண்மனை முன்னதாக விடுத்த அறிக்கையில், ஒரு சிறைக் கைதிக்கு மன்னிப்பு கோர விரும்பும் எவரும் யாங் டி-பெர்துவான் அகோங் தலைமையில் கூடும் மன்னிப்பு வாரியத்திற்கு விண்ணப்பம் செய்ய வேண்டும் என இஸ்தானா நெகாரா நினைவூட்டியது.

யாங் டி-பெர்துவான் அகோங் சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கந்தரின் உத்தரவை மேற்கோள் காட்டி சட்டத் துறைத் தலைவர் (அட்டர்னி ஜெனரல்) அலுவலகம் கடந்த வாரம் வெளியிட்ட அதே போன்ற அறிக்கையை இது எதிரொலித்தது.

நஜிப் உட்பட எவரேனும், மீதமுள்ள தண்டனையை வீட்டுக் காவலில் அனுபவிக்க முன்மொழிய விரும்பினால், சட்டத்திற்கு இணங்க பரிசீலனைக்காக மன்னிப்பு வாரியத்திற்கு சம்பந்தப்பட்ட விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டுமே தவிர – வேறு எந்த வழியிலும் அல்ல என சட்டத் துறை அலுவலகம் வலியுறுத்தியது.

இதைத் தொடர்ந்து, கைதிகளுக்கு மன்னிப்பு வழங்கும் யாங் டி-பெர்துவான் அகோங்கின் உரிமை தொடர்பான எந்த பேரணிகளிலும் பொதுமக்கள் பங்கேற்க வேண்டாம் என காவல்துறைத் தலைமை அதிகாரி ரசாருதின் ஹுசைன் நேற்று வெள்ளிக்கிழமை (ஜனவரி 3) வேண்டுகோள் விடுத்தார்.

42 மில்லியன் மில்லியன் முறைகேடு தொடர்பான எஸ்ஆர்சி (SRC) இன்டர்நேஷனல் வழக்கில் ஊழல் குற்றம் சாட்டப்பட்டு நஜிப் ஏற்கனவே 12 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 210 மில்லியன் ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்டார்.

கடந்த ஆண்டு (2024) ஜனவரி 29 அன்று நடைபெற்ற கூட்டத்தில், மன்னிப்பு வாரியம் அவரது தண்டனையை ஆறு ஆண்டுகள் சிறைத் தண்டனையாகவும் RM50 மில்லியன் அபராதமாகவும் குறைத்தது.

அம்னோ பேரணியை ரத்து செய்தாலும், பாஸ் கட்சி தாங்கள் தொடர்ந்து பேரணியை நடத்தப் போவதாக அறிவித்திருக்கிறது.