Home நாடு நஜிப் தண்டனையைக் குறைப்பது நியாயமா? தொடரும் சர்ச்சைகள்! எப்போது விடுதலை?

நஜிப் தண்டனையைக் குறைப்பது நியாயமா? தொடரும் சர்ச்சைகள்! எப்போது விடுதலை?

577
0
SHARE
Ad

கோலாலம்பூர் : முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக்கிற்கு வழங்கப்பட்ட 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை பாதியாகக் குறைக்கப்பட்டிருப்பதுதான் இப்போது நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் விவகாரம்.

நஜிப்பின் தண்டனைக் காலம் 12 ஆண்டுகளில் இருந்து 6 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டிருக்கிறது. அவருக்கான அபராதத் தொகை 210 மில்லியனில் இருந்து 50 மில்லியனாகக் குறைக்கப்பட்டிருக்கிறது. 50 மில்லியன் அபராதத் தொகை செலுத்தாவிட்டால் அவர் மேலும் ஓராண்டு சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும்.

ஜனவரி 29-ஆம் தேதி நடைபெற்ற அரச மன்னிப்பு வாரியக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.

#TamilSchoolmychoice

எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் நிறுவனம் தொடர்பான ஊழல் வழக்கில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்ட நஜிப் தற்போது 12 ஆண்டுகால சிறைத் தண்டனையை அனுபவித்து வருகிறார்.

தண்டனைக் காலம் குறைக்கப்பட்டிருப்பதால் எதிர்வரும் 23 ஆகஸ்ட் 2028-இல்தான் அவர் விடுதலையாக முடியும்.

ஆனால், தண்டனைக் காலத்தில் பாதியை ஒருவர் கழித்திருந்தால் அந்நபர் பரோல் எனப்படும் சிறையில் இல்லாமல் சிறைக்கு வெளியே தன் இல்லத்தில் எஞ்சிய தண்டனையைக் கழிக்க விண்ணப்பிக்க முடியும். இதன் அடிப்படையில் அடுத்த ஆண்டு 3 ஆண்டுகள் தண்டனைக் காலத்தை நிறைவு செய்யும்போது நஜிப் பரோலில் வெளியே வர விண்ணப்பிக்க முடியும்.

இதற்கிடையில் நஜிப் குடும்பத்தினர் முழுமையான அரச மன்னிப்பு கிடைக்காதது குறித்து ஏமாற்றம் தெரிவித்திருக்கின்றனர்.

அதே சமயத்தில் நஜிப் மீதான வழக்கை விசாரித்த மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய அதிகாரியான பாஹ்ரி முகமட் சின் என்பவர் நஜிப்பின் தண்டனை குறைக்கப்பட்டிருப்பது குறித்து அதிர்ச்சி தெரிவித்திருக்கிறார். பணக்காரர்களுக்கும் மற்ற பிரமுகர்களுக்கும் தண்டனையில் சலுகைகள் வழங்கப்படுவதாகவும் மற்ற குற்றவாளிகளுடன் ஒப்பிடும்போது பாரபட்சம் காட்டப்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டிருக்கிறார்.

மூடா கட்சியினர் நஜிப்பிற்கு தண்டனைக் காலத்தை குறைத்திருப்பது தொடர்பில் கண்டனத்தை வெளியிட்டிருக்கின்றனர்.

6 ஆண்டுகள் தண்டனைக் காலத்தில் மூன்றில் ஒரு பகுதி அதாவது 2 ஆண்டுகள் குறைக்கப்படும் என்ற ஒரு கருத்தும் வழக்கறிஞர்களால் முன்வைக்கப்படுகிறது.

அரச மன்னிப்பு வாரியம் நஜிப்புக்கு ஏன் தண்டனைக் காலம் குறைக்கப்படுகிறது என்பதற்கான விளக்கத்தை வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருக்கிறார் அம்னோவின் முன்னாள் அமைச்சரும் இளைஞர் பகுதித் தலைவருமான கைரி ஜமாலுடின்.

இவ்வாறாக பல்வேறு சர்ச்சைகளை நஜிப்பின் தண்டனைக் காலத்தைக் குறைக்கும் முடிவு ஏற்படுத்தியிருக்கிறது.