கோலாலம்பூர் : நாடு முழுவதும் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வரும் விவகாரம் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கு அரச மன்னிப்பு வழங்கப்படுமா என்பதுதான்!
உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் இதுகுறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிடுவார் என அனைவரும் நேற்று புதன்கிழமை (31 ஜனவரி) பிற்பகலில் காத்திருக்க, அவரோ அது குறித்து அறிவிப்பதைத் தவிர்த்து விட்டார்.
அதற்கான அதிகாரம் தன்னிடம் இல்லை என தெரிவித்தார். அதைத் தொடர்ந்து கூட்டரசுப் பிரதேச அமைச்சர் டாக்டர் சாலிஹா முஸ்தாபா நஜிப்பின் விண்ணப்பம் மீதான முடிவு என்ன என்பது இந்த வாரத்தில் அறிவிக்கப்படலாம் என கோடி காட்டியிருக்கிறார்.
அரச மன்னிப்பு வாரியக் குழுவில் சாலிஹாவும் இடம் பெற்றிருக்கிறார். இன்று வியாழக்கிழமை கூட்டரசுப் பிரதேச தினக் கொண்டாட்டங்களைத் தொடக்கி வைத்த பின்னர் பத்திரிகையாளர்களிடம் பேசியபோது அவர் இதனைத் தெரிவித்தார்.
இதற்கிடையில் நஜிப்பின் தண்டனைக் காலம் 6 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டிருப்பதாக அயல்நாட்டு ஊடகம் ஒன்று தெரிவித்தது. ஜனவரி 29-ஆம் தேதி நடைபெற்ற அரச மன்னிப்பு வாரியக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அந்த செய்தி தெரிவித்தது.
நஜிப்புக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகை குறைக்கப்பட்டிருப்பதாகவும் ஊடகங்கள் ஆரூடங்கள் வெளியிட்டிருக்கின்றன.
எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் நிறுவனம் தொடர்பான ஊழல் வழக்கில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்ட நஜிப் தற்போது 12 ஆண்டுகால சிறைத் தண்டனையை அனுபவித்து வருகிறார்.