ஒரு வரலாற்றுபூர்வ காலகட்டத்தில் மாமன்னராகப் பதவியேற்றார் பகாங் ஆட்சியாளர் துங்கு அப்துல்லா. 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாமன்னர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்பது நாட்டின் அரசியல் சாசன நடைமுறை. மாமன்னராக இருந்த கிளந்தான் சுல்தான் சில தனிப்பட்ட காரணங்களால் திடீரென பதவி விலக மாமன்னராகக் கூடிய வரிசையில் அடுத்து இருந்தவர் பகாங் சுல்தான்.
எனினும் துங்கு அப்துல்லாவின் தந்தையார் உடல் நலம் குன்றியிருந்த நிலையில் துங்கு அப்துல்லா பகாங் சுல்தானாக நியமிக்கப்பட்டு, மாமன்னராக 2019 ஜனவரி 31-ஆம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார்.
அவர் மாமன்னராக அரியணையில் அமர்ந்தபோது பிரதமராக இருந்தவர் துன் மகாதீர். 2020-இல் மகாதீர் பதவி விலக, அடுத்து வந்த ஆண்டுகளில் டான்ஸ்ரீ முஹிடின் யாசின், டத்தோஸ்ரீ இஸ்மாயில் சாப்ரி ஆகியோர் பதவியேற்றனர்.
2022 பொதுத் தேர்தல் நடைபெற டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் பிரதமரானார். ஆக தன் 5 ஆண்டுகால ஆட்சியில் 4 பிரதமர்களைக் கண்ட வரலாற்று முத்திரையோடு கடந்த ஜனவரி 30-ஆம் தேதி மாமன்னராக விடைபெற்றுக் கொண்டார் துங்கு அப்துல்லா.
தங்களின் ஆட்சிக் காலம் சிறப்பான அமைய ஒத்துழைத்த மலேசியர்களுக்கும் தங்களின் நன்றியை மாமன்னர் தம்பதியர் தெரிவித்துக் கொண்டனர்.
ஜனவரி 30-ஆம் தேதி காலை 10.20 மணிக்கு கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்துக்கு மாமன்னர் தம்பதியர் வந்தபோது அவர்களை வழியனுப்பி வைக்க சிலாங்கூர் சுல்தானின் புதல்வர் இளவரசர் தெங்கு அமிர் ஷா சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா நேரில் வந்திருந்தார்.
பிரதமர் அன்வார் தம்பதியரும், துணைப் பிரதமர்களும் மாமன்னரை சடங்குபூர்வ நிகழ்ச்சிக்குப் பின்னர் பகாங் மாநிலத் தலைநகர் குவாந்தானுக்கு வழியனுப்பி வைத்தனர். மாமன்னர் விடைபெற்ற சடங்கில் இரண்டு யானைகளும் பங்கு பெற்றன.
காலை 11.16 மணியளவில் மாமன்னர் தம்பதியரை ஏற்றிக் கொண்ட சிறப்பு விமானம் இரண்டு மலேசிய விமானப் படை போர் விமானங்களின் பாதுகாப்புத் துணையோடு கோலாலம்பூரிலிருந்து குவாந்தானுக்கு புறப்பட்டுச் சென்றது.
மாமன்னரின் அந்த சடங்குபூர்வமான பிரியாவிடைக் காட்சிகளை இங்கே காணலாம்: