சென்னை : திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு இடையில் அவ்வப்போது உரசல்கள் தலைகாட்டி வந்த நிலையில், அண்மையக் காலமாக விடுதலை சிறுத்தைகள் கட்சி (விசிக) கூட்டணியில் இருந்தே வெளியேறும் என்னும் அளவுக்கு மோதல்கள் வெடித்தன. ஆதவ் அர்ஜூன் விசிகவிலிருந்து வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து கடந்த சில வாரங்களாக கூட்டணியில் அமைதி நிலவி வந்தது.
விசிக எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் 25 சட்டமன்றத் தொகுதிகள் கேட்டிருப்பதாக செய்திகள் வந்தாலும் அந்த விவகாரம் அடக்கியே வாசிக்கப்பட்டது.
தற்போது அண்ணா பல்கலைக் கழக மாணவி மீதான பாலியல் வன்முறை தொடர்பான விவகாரத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகளும் போராடத் தொடங்கியுள்ளன.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் போராட்டங்கள் ஒடுக்கப்படுவது குறித்து பேசியபோது இப்போது அறிவிக்கப்படாத அவரச காலம் நடைபெறுகிறதா என சாடியிருந்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் திமுகவின் அதிகாரபூர்வ நாளேடான முரசொலியில் “தோழமைக்கு இது இலக்கணம் அல்ல ; திமுகவுக்கு எதிரான சதி கூட்டத்திற்கு போடும் தீனி” என கே.பாலகிருஷ்ணன் பேச்சை முரசொலி விமர்சனம் செய்துள்ளது.
விழுப்புரத்தில் நடைபெற்று வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டில் உரையாற்றும்போது அக்கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன், அரசியல் கட்சிகள் நடத்தும் போராட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாகவும், தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத அவசர நிலை உள்ளதா? என்றும் கேள்வியெழுப்பியிருந்தார்.
அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் விவகாரத்தால், இனி திமுக கூட்டணி கட்சிகளுக்கு இடையிலும் மோதல்கள் வெடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.