புத்ரா ஜெயா: (காலை 9.00 மணி நிலவரம்) தனக்கு குறைக்கப்பட்ட சிறைத் தண்டனையின் எஞ்சிய காலத்தை வீட்டுக் காவலில் இருந்தபடியே அனுபவிப்பதா என்பது தொடர்பில் தான் சமர்ப்பித்த மேல்முறையீட்டு வழக்குக்காக இன்று திங்கட்கிழமை ஜனவரி 6-ஆம் தேதி டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் புத்ரா ஜெயாவில் உள்ள மேல்முறையீட்டு நீதிமன்ற வளாகத்தை வந்தடைந்தார்.
அவரை ஏற்றிக் கொண்டு வந்த காஜாங் சிறைச்சாலை வாகனம் காலை 8.30 மணியளவில் நீதிமன்ற வளாகம் வந்தடைந்தது. பாதுகாவலர்களுடன் நீதிமன்ற அறையில் நஜிப் தனது விசாரணைக்காகத் தற்போது காத்திருக்கிறார்.
எஞ்சிய சிறைத் தண்டனையை முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் வீட்டுக்காவலில் அனுபவிக்கும் வண்ணம் நீதிமன்றத் தீர்ப்பு கிடைக்குமா? என்பது அனைவரும் இன்று ஆவலுடன் எதிர்பார்த்து நிற்கும் கேள்வி!
அம்னோ ரத்து செய்தாலும் நஜிப்புக்கு ஆதரவான பேரணியில் பல அம்னோ தலைவர்கள் புத்ரா ஜெயாவில் மேல்முறையீட்டு நீதிமன்ற வளாகத்தின் முன்பாகத் திரண்டுள்ளனர் என ஊடகங்கள் தெரிவித்தன. அவர்களில் துணைப் பிரதமர் சாஹிட் ஹாமிடியின் புதல்வி நூருல் ஹிடாயாவும் ஒருவர் என ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பாஸ் கட்சியினரும் நீதிமன்ற வளாகத்தின் முன் திரண்டிருக்கின்றனர். அங்கு திரண்டிருக்கும் ஆதரவாளர்களுக்கு பெயர் தெரிவிக்க விரும்பாத நன்கொடையாளர்கள் ரொட்டியும் பானமும் இலவசமாக விநியோகித்தனர்.
இதற்கிடையில் அம்னோ நஜிப்புக்கான ஆதரவு பேரணியை ரத்து செய்தாலும் பத்துமலை வளாகத்தில் பிரார்த்தனை கூட்டம் ஒன்றை இன்று காலை 11.00 மணிக்கு நடத்தவிருக்கிறது மஇகா.