Home நாடு மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம், டேவான் பஹாசா டான் புஸ்தகா தலைமை இயக்குனருடன் சந்திப்பு!

மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம், டேவான் பஹாசா டான் புஸ்தகா தலைமை இயக்குனருடன் சந்திப்பு!

267
0
SHARE
Ad

*டேவான்  பஹாசா டான் புஸ்தகா தலைமை இயக்குனர் டாக்டர் ஹாசாமி பின் ஜாஹாரியுடன் மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம் சந்திப்பு.

*மோகனன் பெருமாள் தலைமையிலான சங்கத்தின் புதிய முன்னெடுப்பு.

கோலாலம்பூர் –  டேவான் பஹாசா டான் புஸ்தகா தலைமை இயக்குனர் டாக்டர் ஹாசாமி பின் ஜாஹாரியை மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்க செயலவையினர்  மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். இந்த சந்திப்பு கடந்த வெள்ளிக்கிழமை ஆகஸ்ட் 9-ஆம் தேதி காலை 11.00 மணியளவில் டேவான் பகாசா டான் புஸ்தாகா அலுவலகத்தில் நடைபெற்றது.

#TamilSchoolmychoice

சங்கத்தின் சார்பில் தலைமை இயக்குனருக்கு மாலை அணிவித்து சிறப்பு செய்யபட்டது.

இந்தச் சந்திப்பின் போது, மலேசியத் தமிழ் எழுத்தாளர்களின் தரமான படைப்புகளைத் தேசிய மொழியில் மொழியாக்கம் செய்து, அவற்றை டேவான் பஹாசா டான் புஸ்தகா வெளியிடும் சஞ்சகைகளில் அச்சேற்ற வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் மோகனன் பெருமாள் முன்வைத்தார்.

மோகனன் பெருமாள் தலைமையில் பொருளாளர் முனியாண்டி மருதன், அயலகக் குழுத் தலைவர் இராஜேந்திரன், துணைப் பொருளாளர் மு.காசிவேலு, எழுத்தாளர் வனிதா இராதாகிருஷ்ணன், ஆகியோர் டேவான் பஹாசா டான் புஸ்தாகாவின் தலைமை இயக்குனர் டாக்டர் ஹாசாமி பின் ஜாஹாரி அவர்களுடனான சந்திப்பில் கலந்து கொண்டனர்.

கடந்த மே மாதத் தொடக்கத்தில் தலைவராக பொறுப்பேற்ற மோகனன் பெருமாள் மூன்று மாதங்களாக பல்வேறு தரப்பினருடன் கலந்தாலோசித்துத் தயாரித்த அறிக்கையில் முன்வைக்கப்பட்ட அனைத்து கோரிக்கைகளையும் அமலாக்கம் செய்வதற்கு சாத்தியமானவையே என்றும் – உங்களது கோரிக்கைகளைக் கொள்கை அளவில் ஏற்றுக் கொள்வதாகவும் – டாக்டர் ஹாசாமி தெரிவித்தார்.

அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் குறித்து உடனடியாக செயலில் ஈடுபடுங்கள் என இந்தச் சந்திப்பில் கலந்து கொண்ட துணை இயக்குனர்களைக் கேட்டுக் கொண்டார்.

சங்கத்தின் சார்பில் தலைமை இயக்குனர் டாக்டர் ஹாசாமி அவர்களுக்கு பொன்னாடை, மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. டேவான் பஹாசா டான் புஸ்தாகாவின் பன்மொழி பிரிவிற்கான தலைவர் டாக்டர் அசிசுல் ஹாஜி இஸ்மாயில் உடனடியாக அடுத்தக் கட்ட சந்திப்பிற்கான நேரம் ஒதுக்கிக் கொடுத்தார்.

அதோடு டேவான் பகாசா டான் புஸ்தாகாவின் கீழ் வெளிவரும் 11 சஞ்சிகைகளிலும் மொழியாக்கம் செய்த தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை பிரசுரிக்க முடியும் என்று தெரிவித்தார்.

ஆனால் அந்தப் படைப்புகளின் தரத்தையும் மொழியாக்கத்தின் தரத்தையும் உறுதி செய்ய வேண்டும் என்று தலைமை இயக்குனர் கேட்டுக் கொண்டார்.

கவிஞர் ராஜமோகன் அவர்கள் எழுதி பேராசிரியர் முனைவர் நடராஜன் தம்பு அவர்கள் மொழியாக்கம்செய்த ஆட்டிசம் குழந்தைகளைப் பற்றிய கவிதையை முழுமையாக வாசித்த தலைமை இயக்குனர், டேவான் பகாசா டான் புஸ்தாகா அச்சகப் பிரிவு துணை இயக்குனரிடம் கொடுத்தார்.

இந்தக் கவிதை மாற்றுத்திறனாளி மாணவர்கள் கல்வி வாரத்தில் பள்ளிகளில் விநியோகிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

டேவான் பஹாசா டான் புத்தகம் எதிர்பார்க்கும் தரத்திற்கு ஏற்ப படைப்புகளை உருவாக்குவது மொழியாக்கம் செய்வது குறித்தும் பட்டறைகள் நடத்தலாம் என்று தலைமை இயக்குனர் தெரிவித்தார்