கேமரன் மலை : 2018 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் பக்காத்தான் ஹாரப்பான் கூட்டணி வெற்றி பெற்று அதன் மூலம் பிரதமர் ஆனவர் துன் மகாதீர் முகமட். ஆனால் அடுத்த இரண்டு ஆண்டுகளில் அவர் அந்தப் பதவியில் இருந்து வீழ்த்தப்பட்டார். அவருக்கு பதிலாக முஹிடின் யாசின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த ஆட்சி மாற்றத்திற்கும் மகாதீர் வீழ்த்தப்பட்டதற்கும் பின்னணியில் செயல்பட்டவர்கள் யார் என்பது குறித்து அவ்வப்போது பல்வேறு ஆருடங்கள் வெளிப்படுத்தப்பட்டு வந்தன.
இப்போது முதல் முறையாக மகாவீரரை வீழ்த்துவது மூளையாக செயல்பட்டவன் நான்தான் என பகிரங்கமாக அறிவித்துள்ளார் அம்னோவின் தேசியத் தலைவரும் துணைப் பிரதமருமான டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹாமிடி.
“பிரதமராக இருந்தபோது அம்னோவை தடை செய்யும் முடிவை மகாதீர் எடுத்தார். அதைத் தொடர்ந்து அந்த தகவலை அன்வார் இப்ராஹிமும் உறுதிப்படுத்தினார். அம்னோவைத் தடை செய்யும் அந்த உத்தரவுக் கடிதம் உள்துறை அமைச்சராக இருந்த முஹிடின் யாசின் மேசையில் அவரது கையெழுத்துக்காக காத்திருந்தது. அந்த சூழ்நிலையில் மகாதீரின் முடிவை முறியடிக்கும் ஓர் அசாதாரண நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு நான் தள்ளப்பட்டேன்” என சாஹிட் ஹாமிடி தெரிவித்தார்.
“அந்த நெருக்கடியான காலகட்டத்தில் அம்னோவின் உயர்மட்டத் தலைவர்கள் கட்சி தடை செய்யப்படக் கூடாது என்பதை உறுதி செய்ய அடுத்த கட்ட நடவடிக்கைக்காக என்னை எதிர்பார்த்தார்கள். எனவேதான் நான் அம்னோவைக் காப்பாற்றுவதற்காக மகாதீரை பதவியிலிருந்து வீழ்த்தும் அந்த முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானேன்” என இன்று சனிக்கிழமை (ஆகஸ்ட் 10) கேமரன் மலை அம்னோ தொகுதி கூட்டத்தைத் திறந்து வைத்து உரையாற்றியபோது துணைப் பிரதமர் அவ்வாறு தெரிவித்ததாக சினார் ஹாரியான் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
தனது உரையின்போது சாஹிட் ஹாமிடி கடந்த 2018 அம்னோ பொதுப் பேரவையை நிறைவு செய்து உரையாற்றும் போது, தான் கூறியதையும் நினைவு கூர்ந்தார். “அரசாங்கத்தின் ஒரு பகுதியாக நாம் மாறுவோம் என நான் அந்த மாநாட்டில் சூளுரைத்தேன். ஆனால் அம்னோவில் இல்லாத சிலர் எனது உரையை கேலி செய்தனர். கிண்டல் அடித்தனர். அத்தகைய ஒரு சூழ்நிலையில் பிரதமராக இருந்த மகாதீரை பதவியில் இருந்து அகற்றும் திட்டத்திற்கு மூளையாக பின்னணியில் நான் செயல்பட்டேன். அம்னோவின் நலனுக்காக – நமது கட்சி தடை செய்யப்பட்டு விடக்கூடாது – அவமானப்படுத்தப்படக்கூடாது என்பதற்காக நம்மை எதிர்க்கும் பல முரண்பட்ட தலைவர்களுடன் சேர்ந்து அவரை வீழ்த்தினேன்” என்றும் சாஹிட் ஹாமிடி குறிப்பிட்டார்.
இது குறித்து மற்ற வெளிவராத தகவல்கள் நூல் ஒன்றில் விவரமாக பதிவு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார். “இதுவரை நான் கூறியிருப்பது பத்து விழுக்காடு மட்டுமே! எஞ்சிய 90 விழுக்காடு நடப்புகளை எனது நூலில் விவரிப்பேன். பொதுவாக இது போன்ற விவகாரங்களை அரசியலில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர்தான் தலைவர்கள் எழுதுவார்கள். ஆனால் இப்போதைக்கு நான் அம்னோவின் தலைவராக ஓய்வு பெற எண்ணம் கொண்டிருக்கவில்லை. அம்னோ அரசாங்கத்தின் முக்கிய அங்கமாக இப்போது இல்லை. அந்த நிலைமை மாறும்வரை நான் அம்னோவின் தலைவராக நீடிப்பேன்” எனவும் அவர் உறுதிப்படுத்தினார்.
“அரசாங்கத்தை ஆட்சி செய்யும் கட்சி ஆக அம்னோ மாறும் வரை கட்சியின் தேசியத் தலைவராக நானும் எனது அரசியல் சகாக்களும் பதவிகளில் தொடர்வோம். நடப்பு அரசியலில் இருந்து எதிர்கால அம்னோ தலைவர்கள் பாடம் படித்துக் கொள்வார்கள் என கருதுகிறேன் எதிர்காலத்தில் அவர்கள் எனது இடத்தையும் நிரப்புவார்கள்” எனவும் சாஹிட் ஹாமிடி கூறினார்.