
கோலாலம்பூர்: மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கமும் மின்னல் பண்பலை வானொலியும் இணைந்து ஒரு சிறுகதைப் போட்டியை ஏற்பாடு செய்திருக்கின்றனர். அதனை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட சிறுகதைப் பயிலரங்கில் தமிழகத்தைச் சேர்ந்த திரு. ஒளிவண்ணன் உரையாற்றி பயிலரங்கை வழி நடத்தினார்.

பெர்டானா பல்கலைக் கழகம் (Perdana University) ஆதரவுடன் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த இந்த பயிலரங்கம் கடந்த 22 பிப்ரவரி 2025-இல் பெர்டானா பல்கலைக் கழக வளாகத்தில் நடைபெற்றது.
‘செயற்கை நுண்ணறிவு யுகத்தில் தமிழ் எழுத்தாளர்கள்’ என்ற தலைப்பிலான பயிலரங்கில் கலந்து கொள்ள பதிவு செய்த எழுத்தாளர்களில் 90 விழுக்காட்டினர் கலந்து கொண்டனர். எஞ்சிய 10 விழுக்காட்டினர் கடைசி நேரத்தில் வரமுடியாமல் போனதற்கு தங்களது காரணத்தையும் வருத்தத்தையும் பதிவு செய்தனர் என மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் மோகனன் பெருமாள் தெரிவித்தார்.
செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தை எல்லா வயது எழுத்தாளர்களும் புரிந்து கொள்ளும் வகையில் மிகச் சிறப்பாக பயிலரங்கை நடத்திக் கொடுத்த சகோதரர் கோபால் பெருமாள் அவர்களுக்கும் சங்கத்தின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றிகளை மோகனன் தெரிவித்துக் கொண்டார்.

சிறுகதைப் பயிலரங்கில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய பத்து நாடாளுமன்ற உறுப்பினரும் மித்ரா தலைவருமான மாண்புமிகு பி.பிரபாகரன் பயிலரங்கில் கலந்து கொண்ட எழுத்தாளர்களுக்கு நற்சான்றிதழ்களை எடுத்து வழங்கினார்.