சென்னை: முரசு அஞ்சல் செல்லினம் செயலிகளின் தோற்றுநரும் தமிழ் எழுத்துருவாக்கக்துறை வல்லுநருமான மலேசியக் கணிஞர் முத்து நெடுமாறன் எதிர்வரும் மே 16,17 ஆம் தேதிகளில் (2025) சென்னையில், ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் ஏற்பாட்டில் நடத்தப்படும் 2 நாள் எழுத்துரு உருவாக்கப் பயிலரங்கில் கலந்து கொண்டு முதன்மையான உரைகளை ஆற்றவிருக்கிறார்.
சென்னை, கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் தரைத் தளத்தில் உள்ள மாநாட்டு மண்டபத்தில் இந்தப் பயிலரங்கு நடத்தப்படுகிறது.
“தமிழ் எழுத்துருக்களை உருவாக்க விரும்பும் நண்பர்கள் இந்தப் பயிலரங்கிலும் கருத்தரங்கிலும் கலந்து கொள்ளலாம். பயிலரங்கிற்கு மெக் கணினி தேவை. காரணம் மிகவும் புகழ்பெற்ற எழுத்துருவாக்கச் செயலியான Glyphs மெக் கணினிகளில் மட்டுமே இயங்கும். இதற்கான தற்கால உரிமமும் (license) இலவசமாக வழங்கப்படும்” என இந்தப் பயிலரங்கு குறித்து முத்து நெடுமாறன் தமது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

“பயிலரங்கில் கலந்து கொள்ள வாய்ப்பில்லாவிட்டாலும் கருத்தரங்கில் கலந்து கொள்ளுங்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட தலைப்புகளில் அனுபவம் வாய்ந்த பேச்சாளர்கள் பேசவிருக்கிறார்கள். நாமும் சந்தித்து அளவளாவலாம்” எனவும் முத்து நெடுமாறன் தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
முதல் நாள் மே 16-ஆம் தேதி நடைபெறும் பயிலரங்கில் ரோஜா முத்தையா ஆய்வு நூலகத்தைச் சேர்ந்த எழுத்துரு வடிவமைப்பு நிபுணர்கள் கலந்து கொண்டு, குறுகிய கால, நேரடியாகக் கற்றுக் கொள்ளும் வண்ணம் பயிலரங்கை நடத்துவர். இதன் மூலம் பங்கேற்பாளர்கள் தமிழ் எழுத்துருக்களைத் தொடக்கத்திலிருந்து வடிவமைத்து உருவாக்கும் தொழில் நுட்பத்தைக் கற்றுக் கொள்ள முடியும்.
பங்கேற்பாளர்கள் இந்தப் பயிலரங்கில் கிடைக்கும் பயிற்சிகளுக்குப் பின்னர் அவர்களின் சொந்தக் கற்பனைத் திறனை வளர்த்துக் கொள்ளக் கூடிய ஆற்றலையும், புதிய கைத்திறன்களைக் கையாளும் திறமையையும் பெறுவர். பாரம்பரியக் கைவண்ணமும் நவீன இலக்கவியல் கலைநுட்பத் திறனும் ஒருங்கிணைந்த பயிற்சியின் அனுபவத்தை இந்தப் பயிலரங்கின் மூலம் பங்கேற்பாளர்கள் பெறுவர்.
இந்தப் பயிலரங்கில் இடம் பெறும் முக்கிய கூறுகள் பின்வருமாறு:
1. பயன்பாட்டுக்குரிய தமிழ் எழுத்துருக்களைக் கட்டம் கட்டமாக உருவாக்கும் வழிகாட்டுதல்கள்.
2. நடப்புத் தொழில்துறையில் பயன்படுத்தப்படும் கிளிப்ஸ் செயலி (Glyphs app) மூலம் நிபுணத்துவப் பயிற்சி வழங்கப்படும். இந்தச் செயலியைப் பயன்படுத்துவதற்கான அனுமதியும் (லைசென்ஸ்) பங்கேற்பாளர்களுக்கு வழங்கப்படும்.
3. சிறிய எண்ணிக்கையிலான பங்கேற்பாளர்களுடன் பயிலும் சூழல். தனிப்பட்ட முறையில் பங்கேற்பாளர்களின் கருத்துகளைப் பெற்று ஆலோசனை வழங்கும் வாய்ப்பு.
4. உங்களின் மேக் கணினிகளை கைகளில் ஏந்திக் கொண்டு, உங்களிடம் புதைந்துள்ள படைப்பாக்கத் திறனோடு இந்தப் பயிலரங்கில் கலந்து கொள்ளுங்கள்.
5. பங்கேற்கும் ஒவ்வொருவரிடத்திலும் தனிப்பட்ட கவனம் செலுத்தி இந்தப் பயிலரங்கு நடத்தப்படும் என்பதால் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான பங்கேற்பாளர்களுக்கு மட்டுமே கலந்து கொள்ள வாய்ப்புகள் வழங்கப்படும்.
6. முற்றிலும் இலவசமாக நடத்தப்படும் இந்தப் பயிலரங்கில் கலந்து கொள்ள உடனடியாகக் கீழ்க்காணும் இணைப்பில் பதிந்து கொள்ளுங்கள்:
rmrl.in/en/events/tfs-workshop
அடுத்த நாள் மே 17-ஆம் தேதி மேற்குறிப்பிட்ட அதே இடத்தில் நடத்தப்படும் ஒரு நாள் கருத்தரங்கில் தமிழ் எழுத்துருக்களின் செழுமையான பாரம்பரியம், புதிய நவீனத்துவ, தொழில்நுட்பப் புத்தாக்கங்கள், இத்துறையின் எதிர்கால இலக்குகள் ஆகியக் கூறுகளை உள்ளடக்கிய பல்வேறு சுவையான, அனைவரையும் ஈர்க்கக் கூடிய அங்கங்கள் இடம் பெறும்.
நிபுணத்துவம் கொண்டவர்களிடமிருந்து நேரடியாகப் பெறும் இந்தப் பயிற்சி அனுபவத்தைத் தவற விடாதீகள் என ஆர்வமுள்ளோர் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.