Home உலகம் பிரேசில் விமான விபத்து – 61 பேர் மரணம்!

பிரேசில் விமான விபத்து – 61 பேர் மரணம்!

214
0
SHARE
Ad

சாவ் பாலோ (பிரேசில்) – பிரேசில் நேரப்படி கடந்த வெள்ளிக்கிழமை மாலை (ஆகஸ்ட் 9) சாவோ பாலோ நகருக்கு வெளியே பயணிகள் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் குறைந்தது 61 பேர் உயிரிழந்ததாக பிரேசில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

விபத்து நடந்த இடத்தில் விமானத்தின் பதிவுகளைத் தெரிவிக்கும் கருப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஓர் அதிகாரி தெரிவித்தார். விபத்துக்கான காரணம் இன்னும் தெளிவாகவில்லை என்று வோபாஸ் விமான நிறுவனம் வெள்ளிக்கிழமையன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தது.

விபத்துக்குள்ளான விமானத்தின் மாதிரி

பிரேசிலின் பரானா மாநிலத்தில் உள்ள காஸ்காவெல்லில் இருந்து சாவ் பாலோவுக்கு விமானம் பயணித்துக் கொண்டிருந்தது. பிரேசிலின் வின்ஹேடோவில் உள்ள ஒரு குடியிருப்பு பகுதியில் விமானம் விபத்துக்குள்ளானது என்பதை புவியிட அறிதலின் மூலம் சிஎன்என் செய்தி நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

#TamilSchoolmychoice

பல வீடுகளில் விமானம் மோதியதாக பிரேசிலின் பொது பாதுகாப்புத் துறை தெரிவித்தது. குடியிருப்புப் பகுதியில் விமானம் விபத்துக்குள்ளாவதையும், பின்னர் வானத்தில் சாம்பல் நிற புகை மேலெழுவதையும் காட்டும் சமூக ஊடக காணொலிகள் வலம் வரத் தொடங்கியுள்ளன.

பிரேசிலின் வின்ஹேடோவில் நடந்த இந்த விமான விபத்தில் 4 பணியாளர்கள், 57 பயணிகள் உட்பட விமானத்தில் இருந்த அனைத்து 61 பேரும் உயிரிழந்தனர். இந்த விபத்தைத் தொடர்ந்து பிரேசில் அதிபர் லுயிஸ் இனாசியோ லுலா டா சில்வா மூன்று நாட்கள் தேசிய துக்கம் அனுசரிக்க அறிவித்துள்ளார். விபத்துக்கான காரணம் இன்னும் விசாரணையில் உள்ளது. ஆரம்ப அறிக்கைகள் கடுமையான பனி உறைதலை ஒரு சாத்தியமான காரணியாகக் குறிப்பிடுகின்றன.