கோலாலம்பூர், ஜூலை 24 – மலேசியாவின் ஒரு பகுதியாக இணைந்திருப்பதே சபாவுக்கு சிறந்த தேர்வாக இருக்கும் என அதன் முதல்வர் டத்தோஸ்ரீ முசா அமான் தெரிவித்துள்ளார்.
கூட்டரசின் ஒரு பகுதியாக இருப்பதால் சபா நன்கு வளர்ச்சி கண்டிருப்பதாகவும், அங்கு அமைதியும் நல்லிணக்கமும் நிலவுவதாகவும் அவர் கூறியுள்ளார். எனவே பிரிவினைக்கான கேள்வியே எழவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“மலேசிய நாட்டின் ஒரு பகுதியாக இருப்பதால் சபா மற்றும் சரவாக் நன்கு வளர்ச்சி கண்டுள்ளன. எனவே பிரிவினை குறித்து பேச வேண்டிய அவசியமே இல்லை,” என்று வியாழக்கிழமை நடைபெற்ற அம்னோ பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பின்போது முசா அமான் கூறினார்.
சபாவின் வளர்ச்சி மற்றும் தேவைகளுக்காக மத்திய அரசுடன் மிக அணுக்கமாகச் செயல்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர், மாநிலத்தின் கோரிக்கைகளை மத்திய அரசு நன்கு செவிமடுப்பதாகத் தெரிவித்தார்.
“மத்திய அரசுடன் இணைந்து செயல்படுவதால் மகிழ்ச்சியடையும் அதே வேளையில், மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் சபா மக்களின் நலன்களைக் கட்டிக் காப்பதில் எங்களுக்கு அனைத்து உரிமைகளும் தேவை என விரும்புகிறோம். மாநிலத்தின் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் தொடர்பில் எங்களது கோரிக்கைகளை மத்திய அரசு செவிமடுப்பதுடன் வரவேற்கத்தகுந்த நடவடிக்கைகளையும் எடுக்கிறது,” என்று முசா அமான் மேலும் தெரிவித்தார்.