சென்னை – தமிழக சட்டசபைக் கூட்டத்தின், மூன்றாம் நாளான இன்று, நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு மணி மண்டபம் கட்டப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
முதல்வரின் அதிகாரத்திற்குட்பட்ட 110 விதியின் கீழ், திட்டங்களை அறிவித்து வரும் அவர், மணி மண்டபம் தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழக நடிகர் சங்கம் சார்பில், சிவாஜிக்கு நினைவிடம் அமைக்கப்படுவதாக இருந்தது. ஆனால் அப்பணிகள் தாமதமாகி வருவதால், அரசே மணிமண்டபத்தை கட்டி முடிக்க முடிவு செய்துள்ளது.”
“சிவாஜியின் கலைச் சேவையை போற்றும் வகையில், சென்னை அடையாறு சத்யா ஸ்டுடியோவிற்கு எதிரே இந்த மணி மண்டபம் கட்டப்படும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
முதல்வரின் இந்த அறிவிப்பிற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் பாராட்டுக்களைத் தெரிவித்தனர். அப்போது, காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி, சிவாஜி காங்கிரஸ்காரர் என தெரிவித்தார். அதற்கு பதில் அளிக்கும் வகையில் பேசிய முதல்வர் ஜெயலலிதா, “சிவாஜி எந்த கட்சிக்கும் சொந்தக்காரர் அல்ல. அவர் நாட்டுக்கே சொந்தக்காரர் என தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, அவை உறுப்பினர்கள் அனைவரும் மேசைகளைத் தட்டி ஆரவாரமிட்டனர்.