மதுரை – “நமக்கு நாமே” என்ற பிரச்சாரப் பயணத்தை துவக்கி உள்ள ஸ்டாலின், நேற்று மதுரையில் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க அலுவலகம் சென்று, அங்கு உள்ள வணிகர்களுடன் கலந்துரையாடினார்.
அப்போது அவர், “அதிமுக ஆட்சியில் எதுவும் நடக்கவில்லை. இங்கு நான் அரசியல் பேசினால், அது உங்களுக்கு சிக்கலை எற்படுத்திவிடும். திமுக ஆட்சி காலத்தில் வணிகர்கள் நிம்மதியாக தொழில் செய்து வந்தனர். ஊழல் இல்லாத நிர்வாகம் தான் சிறப்பாக இருக்கும். திமுக ஊழலற்ற ஆட்சியை கொடுக்கும் என்று உறுதி கொடுக்கிறேன்.”
“கடந்த காலத்தில் சில தவறுகள் நடந்து இருக்கலாம். இல்லை என்று மறுக்கவில்லை. அந்த தவறுகளுக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்தார்.
அப்படி அவர் தெரிவித்தது திமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த கால திமுக ஆட்சியில், கருணாநிதி தமிழக முதல்வராக இருந்தார். ‘கடந்த காலத்தில் சில தவறுகள் நடந்து இருக்கலாம். இல்லை என்று மறுக்கவில்லை’ என்று ஸ்டாலின் கூறியதன் மூலம், கருணாநிதியின் ஆட்சியில் தவறு நடந்திருக்கிறது என்று குறிப்பிடுகிறாரா? என ஒருசிலர் சந்தேகத்தை கிளப்பி உள்ளனர்.
இதற்கிடையே ஸ்டாலின் பேச்சு பற்றி அரசியல் விமர்சகர்கள் கூறுகையில், “கடந்த கால ஆட்சியின் போது, மதுரை குறிப்பிட்ட ஒருவரின் கட்டுப்பாட்டில் இருந்தது. அப்போது, அந்த ஒருவரால் வணிகர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அவர் குறித்து தான் ஸ்டாலின் தற்போது பேசியுள்ளார்” என்று தெரிவித்துள்ளனர்.
இதன் மூலம், திமுகவில் மீண்டும் புகைச்சல் ஏற்பட வாய்ப்புள்ளதாகவே பார்க்கப்படுகிறது.