கோலாலம்பூர்- 1எம்டிபி தொடர்பில் மலாய் ஆட்சியாளர்கள் அறிக்கை விடுத்ததில் எந்தவிதத் தவறும் இல்லை என துன் மகாதீர் கருத்து தெரிவித்துள்ளார்.
மாமன்னரும் மலாய் ஆட்சியாளர்களும் அரசியல் அமைப்பின் வழி மன்னர்கள் என்பது உண்மை என்றும் அவர் கூறியுள்ளார்.
“அதற்காக அவர்கள் ரப்பர் ஸ்டாம்புகள் (ரப்பர் முத்திரைகள்) போல் செயல்பட்டு அரசாங்கத்தின் அனைத்துவித நடவடிக்கைகளையும் அங்கீகரிக்க வேண்டிய அவசியம் இல்லை. நாட்டு மக்களின் நலனைக் கட்டிக்காப்பது மன்னர்களின் கடமை.”
“ஆட்சியாளர்கள் தங்களது உரிமையை நிலைநாட்டியதற்கு அண்மைய உதாரணங்களும் உள்ளன. குறிப்பாக சிலாங்கூர் மந்திரிபெசார் நியமனத்தை சுட்டிக் காட்டலாம். அதன் வழி அஸ்மின் அலி மந்திரி பெசார் ஆனார்” என்று மகாதீர் கூறியுள்ளார்.
இதே போல் மாமன்னருக்கும் அதிகாரங்கள் உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், நாடாளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தல் நடத்த அவர் உத்தரவிடலாம் என்றார்.
“அரசாங்கத்துக்கும் மாமன்னருக்கும் இடையே உள்ள அதிகாரப் பகிர்வு குறித்து அரசியல் சாசனத்தில் ஏதும் கூறப்படவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. இன்னும் சொல்லப் போனால், பல்வேறு தருணங்களில் மாமன்னர் தனது சுய விருப்பத்தின் பேரில் செயல்படலாம்.”
“மக்களின் பிரச்சினைகள் குறித்து அரசாங்கம் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை எனில், மாமன்னர் அமைச்சரவையில் இடம்பெறாத மற்றவர்களிடமும் கூட கருத்து கேட்கலாம். மலாய் ஆட்சியாளர்கள் அறிக்கை வெளியிட்டது தொடர்பில் அரசியல் சாசன விதிமுறைகளை எந்த வகையிலும் மீறவில்லை” என்றும் மகாதீர் தெரிவித்துள்ளார்.