Home அரசியல் “பக்காத்தான் அரசாங்கம் அமைந்தால் நாடு திவாலாகி விடாது”– முன்னாள் துணைப் பிரதமர் மூசா ஹீத்தாம் கூறுகின்றார்

“பக்காத்தான் அரசாங்கம் அமைந்தால் நாடு திவாலாகி விடாது”– முன்னாள் துணைப் பிரதமர் மூசா ஹீத்தாம் கூறுகின்றார்

574
0
SHARE
Ad

Musa-Hitam-Sliderமார்ச் 13 – எதிர்வரும் 13வது பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று பக்காத்தான் கூட்டணி மத்திய அரசாங்கத்தைக் கைப்பற்றினால் நாடு திவாலாகி விடும் என்று கூறுவது நியாயமல்ல என்று முன்னாள் துணைப் பிரதமர் துன் மூசா ஹீத்தாம் கூறுகின்றார்.

மாறாக, அவர்கள் தேசிய பொருளாதாரத்தை மேலும் முன்னேற்றப்பாதையில் செலுத்தி அதன் மூலம் மக்கள் ஆதரவைப் பெற்று அடுத்து வரும் பொதுத் தேர்தலிலும் மீண்டும் வெல்வதற்கு முயற்சி செய்வார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

நேற்று சீனார் ஹாரியான் மலாய் தினசரி ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கொன்றில் கலந்து கொண்ட பின் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய துன் மூசா ஹீத்தாம் “நாடு திவாலாகி விடும் என்பது ஓர் அரசியல் அறிக்கையாகும். என்னைப் பொறுத்தவரையில் அப்படி நடக்காது. இது எனது தனிப்பட்ட கருத்து என்பதோடு இதையேதான் நான் வெளிநாட்டுக்காரர்களிடமும் வங்கிகளிடமும் கூறிவருகின்றேன்” என்றும் அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

“ஜனநாயகத்தின் மீது நீங்கள் நம்பிகை வைத்தால் ஆட்சியைப் பிடிக்கும் மற்றொரு கட்சி நாட்டை திவாலாக்கி விடும் என்று கூறமாட்டீர்கள். பக்காத்தான் அரசாங்கம் வெளிநாட்டு முதலீட்டாளர்களை விரட்டியடிக்காது. நாட்டை திவாலாக்காது. காரணம், அடுத்த பொதுத் தேர்தலிலும் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கவே அவர்கள் விரும்புவார்கள்” என்றும் மூசா ஹீத்தாம் குறிப்பிட்டார்.

1981ஆம் ஆண்டு முதல் 1986ஆம் ஆண்டுவரை நாட்டின் துணைப் பிரதமராக, துன் மகாதீர் முகமட்டின் கீழ் பணியாற்றிய மூசா ஹீத்தாம், “இன ரீதியிலான அணுகுமுறையைக் கையாளும் அரசியல்வாதிகள்தான் திவாலான, காலாவதியான சிந்தனைகளைக் கொண்டவர்கள். ஒரு காலத்தில் இன அடிப்படையில் அரசியல் கட்சிகள் இயங்கியதும் அரசியல்  நடத்தப்பட்டதும், உண்மைதான். ஆனால் இப்போதைய கால கட்டத்தில் அத்தகைய சூழல் இல்லை” என்றும் அந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.