ஜோகூர் பாரு: மலேசிய அரசியல்வாதிகளில் மிகப் பெரிய பாரம்பரியத்தைக் கொண்டவர் முன்னாள் துணைப் பிரதமர் துன் மூசா ஹீத்தாம். அவரின் 90-வது வயது பிறந்த நாள் விருந்துபசரிப்பு இன்று ஜோகூர்பாருவில் முக்கிய பிரமுகர்களுடன் கொண்டாடப்பட்டது.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் இந்த விருந்துபசரிப்பில் கலந்து கொண்டு, மூசா ஹீத்தாம் தனது கொள்கையிலும், நேர்மையிலும் தவறாத ஒரு மிகப் பெரிய தலைவர் என புகழாரம் சூட்டினார்.
நாட்டின் பல இன மக்களிடையே ஒற்றுமை நிலவ வேண்டும் என எப்போதும் வலியுறுத்தி பாடுபட்டு வந்திருப்பவர் மூசா ஹீத்தாம் என்றும் அன்வார் பாராட்டு தெரிவித்தார்.
“துன் மூசா உற்சாகத்துடனும் உடல் நலத்துடனும் தொடர்ந்து மக்களிடையே ஒற்றுமையை வலிமைப்படுத்த பாடுபட்டு வருவார்” என்ற நம்பிக்கையையும் அன்வார் வெளிப்படுத்தினார்.
1981 முதல் 1986 வரை துன் மூசா ஹீத்தாம் துணைப் பிரதமராக இருந்தார். அதற்கு முன்னரும் இதே காலகட்டத்திலும் அவர் அமைச்சராகவும் பணியாற்றியிருக்கிறார்.
மூசா ஹீத்தாம் விருந்துபசரிப்பு நிகழ்ச்சி குறித்த புகைப்படங்களையும், தனது கருத்துகளையும் தன் முகநூல் பக்கத்தில் அன்வார் பதிவிட்டார்.