Home Photo News அண்ணாமலை : தமிழ் நாட்டின் இன்றைய பேசுபொருள் – தேர்தலின் ஆட்ட நாயகன்!

அண்ணாமலை : தமிழ் நாட்டின் இன்றைய பேசுபொருள் – தேர்தலின் ஆட்ட நாயகன்!

164
0
SHARE
Ad

(நாளை ஏப்ரல் 19-ஆம் தேதி தமிழ் நாட்டில் முதல் கட்ட வாக்களிப்புக்கு வாக்காளர்கள் செல்லவிருக்கும் தருணத்தில்,தமிழ் நாடு தேர்தலின் ஆட்ட நாயகனாக அண்ணாமலை உருவெடுத்திருக்கிறார் என விவரிக்கிறார் இரா.முத்தரசன்)

சென்னை : தமிழ் நாடு முதல் கட்டமாக நாளை ஏப்ரல் 19-ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்கப் போகிற மாநிலம். இன்று பிரச்சாரங்களுக்கு ஓய்வு நாள்.

சரி! நடந்து முடிந்த அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரங்கள், சம்பவங்கள் ஆகியவற்றை வைத்துப் பார்க்கும்போது தமிழ் நாட்டைப் பொறுத்தவரை இந்த மக்களவைத் தேர்தலில் ஆட்ட நாயகன் யார்? அனைவரையும் கவனத்தையும் ஈர்த்தவர் யார்?

சந்தேகமில்லாமல் கோவை தொகுதியின் வேட்பாளரும் தமிழ் நாடு பாஜக தலைவருமான அண்ணாமலைதான் அவர்!

#TamilSchoolmychoice

சரியான காரணங்களுகாகவோ, தவறான காரணங்களுக்காகவோ ஊடகங்களில் அதிகமாக விவாதிக்கப்பட்டவர் அண்ணாமலைதான்!

அண்ணாமலையின் பிரபலம்

கேரளாவில் இருந்து  மலேசியா வந்து வேலை செய்து கொண்டிருக்கும் நண்பர் ஒருவர் – அவ்வப்போது சந்திக்கும் போது சில அரசியல் விளக்கங்கள் கேட்பார்.  நானும் அவரிடம் கேரளா குறித்த சில சந்தேகங்களை கேட்பேன். இந்த முறை சந்திக்கும்போது அவர் எடுத்த எடுப்பிலேயே கேட்ட கேள்வியைப் பார்த்து ஆச்சரியப்பட்டேன்!

“கோவையில் அண்ணாமலை ஜெயித்து விடுவாரா?” – என்பதுதான் அவரின் அந்தக் கேள்வி.

40 தொகுதிகளில் இந்த ஒரு தொகுதியை மட்டும் ஆர்வத்துடன் கேட்கிறாரே என்பதுதான் எனக்கேற்பட்ட ஆச்சரியத்திற்குக் காரணம்!

“எனக்குக் கிடைத்த தகவல்களின்படி அண்ணாமலை வெல்வது கஷ்டம். மூன்றாவது இடத்திற்கான இடத்திற்கு தான் வருவார்கள் என்கிறார்கள். திமுகவும், அதிமுகவும் நேரடியாகக் களமிறங்கி அண்ணாமலையைத் தோற்கடிக்க  மும்முரமாகப் பாடுபட்டு வருகின்றன” என்று கூறினேன்.

உடனடியாக அந்தக் கேரள நண்பர் “அது எப்படி அண்ணே! எப்படியும் அண்ணாமலை ஜெயிக்க வேண்டும்!” என பதிலளித்தார்.

நினைத்துப் பாருங்கள்! சொல்பவர் தமிழ் நாட்டுக்காரர் கூட அல்ல! கேரளாக்காரர். அதுவும் மலேசியாவில் வேலை செய்பவர்! அவர்தான் அண்ணாமலை வெற்றியடைய வேண்டும் என விரும்புகிறார்.

அந்த அளவுக்கு அண்ணாமலையின் பிரபல்யம் பரவியிருக்கிறது. இந்தத் தேர்தலில் தன் உரைகளால் அனைத்துலகத் தமிழர்களின் கவனத்தை ஈர்த்த – ஆனானப்பட்ட சீமானையே அண்ணாமலை பின்னுக்குத் தள்ளி விட்டார் எனலாம்!

இதனால்தான் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் நாட்டில் ஆட்டநாயகன் அண்ணாமலைதான் என்ற தோற்றம் ஏற்பட்டிருக்கிறது.

அண்ணாமலை தனது தொகுதியில் வெல்வாரா? எத்தனை தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும்? எத்தனை விழுக்காடு வாக்குகளைப் பெறும் என்பதெல்லாம் இன்னொரு விவாதம்!

ஆனால் தமிழ் நாடு முழுக்க என்றில்லாமல், இந்தியா முழுமையிலும் பேசு பொருளாகியிருக்கிறார் அண்ணாமலை. அண்மையில் இந்தியா டுடே தொலைக்காட்சி ஊடகத்தினர் தமிழ் நாட்டில் கள நிலவரங்களை நேரில் காண சந்திப்புகள் நடத்தியபோது அவர்களின் பிரதானமான கேள்விகளும் அண்ணாமலையை மையப்படுத்தியே இருந்தது.

தமிழ்நாட்டு அரசியல் களத்தை மாற்றியமைத்த அண்ணாமலை!

கடந்த 50 ஆண்டுகளாக தமிழ் நாட்டில் – யார் திமுக தலைவரோ – யார் அதிமுக தலைவரோ – அவர்களின் ஆதிக்கம்தான் பிரச்சாரங்களில் முன்னணி வகித்தது. எம்ஜிஆர்-கருணாநிதி, ஜெயலலிதா-கருணாநிதி, ஸ்டாலின்-பழனிசாமி என்றுதான் தமிழ் நாட்டுத் தேர்தல் களம் கட்டமைக்கப்பட்டிருந்தது. அவ்வப்போது, இடையில் தேசியக் கட்சிகளான காங்கிரஸ், பாஜகவின் தலைவர்கள்- பிரதமர்கள் – சில நாட்கள் வந்து போவார்கள்-

இந்த முறையோ தமிழ் நாட்டுத் தேர்தல் களத்தை இந்த முற்றிலும் மாற்றியமைத்தார் அண்ணாமலை!

முதல் கட்டமாக பாஜகவை தனித்து தமிழ் நாட்டில் இயங்கச்செய்ய முடியும் – மக்களவைத் தேர்தலில் நாமே மூன்றாவது கூட்டணி அமைத்துப் போட்டியிட முடியும் – என்பதை நிரூபித்தார்.

அதிமுகவுடன் இணைவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட பாமக, தமிழ் மாநிலக் காங்கிரஸ் போன்ற கட்சிகளை தன் பக்கம் ஈர்த்தார். சரத்குமார் தன் சமத்துவக் கட்சியைக் கலைத்து பாஜகவில் இணையக் காரணமாக இருந்தார். டிடிவி தினகரன், ஓ.பன்னீர் செல்வம் – என அதிமுகவுக்கு எதிர் அரசியல் நடத்தி வந்த அணியினரையும் பாஜகவுடன் இணைய வைத்தார்.

இவையெல்லாம் எந்த அளவுக்கு வெற்றி தரும் – வாக்குகள் பெற்றுத் தரும் – என்ற ஆரூடங்கள் ஒருபுறம் இருக்கட்டும். இந்த மாற்றத்தால் திமுக-அதிமுக இரு தரப்புமே தங்களின் பிரச்சார பீரங்கி முனைகளை அண்ணாமலையை நோக்கி திருப்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

அந்த இரு மாமலைகளையும் எதிர்த்து அரசியல் நடத்திக் காட்டி இருக்கிறார் அண்ணாமலை. அவர் அளவுக்கு துணிச்சலுடனும் – சளைக்காமல் பல சர்ச்சைகளுக்கு இடையில் – பத்திரிக்கையாளர்களின் பல இடக்கு முடக்கு கேள்விகளுக்கு பதில் அளித்துக்கொண்டே – இத்தனை நகர்வுகளையும் இன்னொரு பாஜக தலைவரால் இதைச் சாதித்திருக்க முடியுமா என்பது சந்தேகமே!

அந்த வகையில் தமிழ் நாட்டில் 3-வது அரசியல் சக்தியாக – அடுத்தக் கட்டத் தலைவர்களாகப் பார்க்கப்பட்ட – சீமான், டிடிவி. தினகரன், அன்புமணி ராமதாஸ் போன்றவர்களைப் பின்னுக்குத் தள்ளி விஸ்வரூபமெடுத்திருக்கிறார் அண்ணாமலை.

கிரிக்கெட்டிலும் காற்பந்து போன்ற விளையாட்டுகளிலும், ஆட்ட முடிவில் வழக்கமாக ஆட்டநாயகனாக ஒருவரைத் தேர்ந்தெடுப்பார்கள். அவர் சார்ந்து விளையாடிய குழு வெற்றி பெற்றிருக்க வேண்டிய அவசியமில்லை. சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியவர்  என்ற முறையில்தான் ஆட்ட நாயகன் தேர்ந்தெடுக்கப்படுவார்.

திமுக, அதிமுக இரண்டு கட்சிகளுக்குள்தான் கடுமையானப் போட்டி – அவர்களுக்குள்தான் வெற்றி-தோல்வி என்றாலும்,  இந்த நாடாளுமன்றத் தேர்தலில்  ஆட்டநாயகன் பரிசைப் பெறுபவர்  சந்தேகம் இல்லாமல் அண்ணாமலைதான்!

– இரா.முத்தரசன்