Home Photo News மகாதீர்-துங்கு ரசாலி-மூசா ஹீத்தாம் மோதலால் சுப்ராவுக்கு ஏற்பட்ட நெருக்கடி!

மகாதீர்-துங்கு ரசாலி-மூசா ஹீத்தாம் மோதலால் சுப்ராவுக்கு ஏற்பட்ட நெருக்கடி!

512
0
SHARE
Ad
21 மே 2024 துங்கு ரசாலி நூல் வெளியீட்டு விழாவில் மூசா ஹீத்தாம்

(1987-ஆம் ஆண்டில் அம்னோ கட்சியில் அப்போதைய பிரதமர் துன் மகாதீர்-துங்கு ரசாலி ஹம்சா – துன் மூசா ஹீத்தாம் ஆகியோருக்கு இடையில் ஏற்பட்ட தலைமைத்துவப் போராட்டத்தால் மஇகா தேசியத் துணைத் தலைவராகவும் துணையமைச்சராகவும் இருந்த டான்ஸ்ரீ டத்தோ சி.சுப்பிரமணியத்திற்கும் சில நெருக்கடிகள் ஏற்பட்டன. அவை குறித்து விளக்குகிறார் இரா.முத்தரசன்)

  • துங்கு ரசாலிக்கும் சுப்ராவுக்கும் இடையில் நட்பு தொடங்கியது எப்படி?
  • சிகாமாட் தொகுதியை சுப்ரா பெற்றது எப்படி?
  • மூசா ஹீத்தாமுடன் சுப்ரா நெருக்கமான சம்பவங்களின் பின்னணி!
  • இறுதிவரை சுப்ராவைக் கைவிடாத மகாதீர்!

சில வாரங்களுக்கு முன்னர் முன்னாள் நிதியமைச்சர் துங்கு ரசாலி ஹம்சா, தன் வாழ்க்கை வரலாற்றை எழுதி வெளியிட்டார். அந்த நூலை வெளியிட்டு சிறப்பு செய்தவர் துன் மூசா ஹீத்தாம். அந்த நூல் வெளியீட்டு விழாவில் 1987-ஆம் ஆண்டு அம்னோ – செமாங்காட் 46 அரசியல் போராட்டங்கள் குறித்து மூசா ஹீத்தாம்-துங்கு ரசாலி இருவரும் பழைய நினைவுகளை ஊடகவியலாளர்களிடம் பகிர்ந்து கொண்டனர்.

டான்ஸ்ரீ சுப்ரா

வரலாற்றுபூர்வ அந்தப் போராட்டத்தில் அப்போது மஇகாவின் தேசியத் துணைத் தலைவராக இருந்த டான்ஸ்ரீ டத்தோ சி.சுப்பிரமணியமும் எதிர்பாராதவிதமாக சிக்கிக் கொண்டதும், அதைத் தொடர்ந்து அவருக்கு நிகழ்ந்த சில நெருக்கடிகளும் நினைவுக்கு வந்தன.

#TamilSchoolmychoice

அந்த சுவாரசிய சம்பவங்களை பகிர்ந்து கொள்ளவே இந்தக் கட்டுரை!

துங்கு ரசாலியுடன் நட்பு பாராட்டிய சுப்ரா

சுப்ராவும் துங்கு ரசாலியும் சம காலத்தில் நாடாளுமன்றத்தில் காலடி வைத்தவர்கள். 1974-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் துங்கு ரசாலி உலு கிளந்தான் (பிற்காலத்தில் குவா மூசாங் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது) தொகுதியிலிருந்தும், சுப்ரா கோலாலம்பூர் டாமன்சாரா தொகுதியிலிருந்தும் முதன் முறையாக நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அப்போது துன் ரசாக் பிரதமர். சுப்ராவுக்கு நாடாளுமன்ற செயலாளர், துணையமைச்சர் என பதவிகள் வழங்கப்பட, துங்கு ரசாலியோ அம்னோவின் பொருளாளர், உதவித் தலைவர், நிதியமைச்சர் என அரசாங்கத்திலும் அம்னோ அரசியலிலும் அசுர வேகத்தில் வளர்ச்சியடையத் தொடங்கினார்.

சுப்ராவுக்கும் துங்கு ரசாலிக்கும் அரசாங்க அலுவல்கள் காரணமாக, சந்திப்புகளும், பழக்கமும் ஏற்பட இருவருக்கும் இடையில் நல்ல நட்பு உருவானது.அப்போது மூசா ஹீத்தாமுக்கும் சுப்ராவுக்கும் இடையில் நெருக்கமான நட்பு மலரவில்லை. மூசாவும் அதே 1974-ஆம் ஆண்டில் ஜோகூர் லாபிஸ் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு துணையமைச்சர், அமைச்சர் பொறுப்புகளை வகித்தார். எனினும் துங்கு ரசாலி அளவுக்கு மூசா கட்சியில் செல்வாக்கு பெற்றிருக்கவில்லை.

1982-இல் சிகாமாட் நாடாளுமன்றத்திற்குப் போட்டியிட்ட சுப்ரா

சுப்ரா-தீனா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அப்போதைய பிரதமர் துன் ஹூசேன் ஓன்

இதற்கிடையில் 1978 பொதுத் தேர்தலில் சுப்ரா டாமன்சாரா தொகுதியில் ஜசெகவின் வி.டேவிட்டிடம் தோல்வி கண்டார். 1979-ஆம் ஆண்டில் பிரதமர் துன் ஹூசேன் ஓன் அவர்களால் செனட்டராக ஒரு தவணைக்கு (3 ஆண்டுகள்) நியமிக்கப்பட்டார்.  1979-இல் மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ மாணிக்கவாசகம் மறைவைத் தொடர்ந்து இடைக்காலத் தேசியத் தலைவரான துன் சாமிவேலுவுக்கும் சுப்ராவுக்கும் இடையிலான அரசியல் போராட்டம் உச்சகட்டத்தை அடைந்தது.

1981 மே 26-ஆம் தேதி சாமிவேலு-சுப்ரா இருவருக்கும் இடையிலான சமாதானப் பேச்சு வார்த்தைகளைத் தொடர்ந்து அவர்களுக்கிடையிலான அரசியல் பகைமை ஒரு முடிவுக்கு வந்தது. அதே ஆண்டில் சாமிவேலுவின் ஆதரவோடு, மஇகாவின் தேசியத் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் சுப்ரா.

மஇகா பொதுப் பேரவை ஒன்றில் சாமிவேலு-மகாதீர்-சுப்ரா

1982-இல் பொதுத் தேர்தல். துன் மகாதீர் பிரதமராகச் சந்திக்கும் முதல் தேர்தல் களம். சுப்ரா 1974-இல் போட்டியிட்ட டாமன்சாரா தொகுதி மசீசவுக்கு ஒதுக்கப்பட்டது, அங்கு மசீச தலைவர் டான் கூன் சுவான் போட்டியிட ஆயத்தங்கள் செய்தார். எனவே, டாமன்சாராவுக்கு மாற்றாக மஇகாவுக்கு ஒரு தொகுதியைத் தேடும் படலம் தொடங்கியது. சுப்ராவுக்கு அந்தப் புதிய தொகுதி ஒதுக்கப்படும் என்றும் சாமிவேலு அறிவித்தார்.

இறுதியாக ஒரு தேசிய முன்னணி கூட்டத்தில், சிகாமாட் தொகுதி மஇகாவுக்கு ஒதுக்கப்பட்டது. சுப்ராவுக்கோ அந்தத் தொகுதியைப் பெற்றுக் கொள்ள விருப்பமில்லை. சாமிவேலுவிடம் நேரடியாகவே மறுத்து விட்டார். நான் கட்சியின் துணைத் தலைவராக மட்டும் இருந்து கொள்கிறேன் எனக் கூறிவிட்டார்.

ஜோகூர் மாநிலத்தில் முதன் முறையாக மஇகாவுக்கு ஒதுக்கப்படும் தொகுதி – 5 விழுக்காட்டினர் மட்டுமே இந்திய வாக்காளர்கள் – சீனர்களோ 50 விழுக்காட்டினர் – தலைநகரிலிருந்து வெகு தூரம் (அப்போதெல்லாம் இப்போதுபோல் பிளஸ் நெடுஞ்சாலைகள் இல்லை) – என பல அம்சங்கள் எதிர்மறையாக இருந்ததால் சுப்ரா அங்கு போட்டியிட மறுத்து விட்டார்.

துன் மூசா ஹீத்தாம் – அவரின் முதல் மனைவி தம்பதியருடன் சுப்ரா தம்பதியர்

இந்த சூழ்நிலையில்தான் அந்தப் பிரச்சனையில் நுழைந்தார் மூசா ஹீத்தாம். 1981-இல் நடைபெற்ற அம்னோ தேர்தலில் அவர் பிரதமர் மகாதீர் ஆதரவுடன் துங்கு ரசாலியைத் தோற்கடித்து துணைத் தலைவராகியிருந்தார். அதன் காரணமாக தேசிய முன்னணியின் துணைத் தலைவரும் அவர்தான்.

1981 அம்னோ தேர்தலில் துங்கு ரசாலி மூசாவிடம் தோல்வியடைந்தபோது அவருக்கு ஆறுதல் கூறி, தன் கைப்பட நீண்ட கடிதம் ஒன்றை எழுதி அவருக்கு அனுப்பினார் சுப்ரா.

1982-இல் மஇகாவுக்கு ஒதுக்கப்பட்ட சிகாமாட் தொகுதியில் போட்டியிடுவதா இல்லையா என சுப்ரா தடுமாறிக் கொண்டிருந்த தருணத்தில், ஒரு தேசிய முன்னணிக் கூட்டத்தின்போது அவரை அழைத்துப் பேசினார் மூசா ஹீத்தாம். “தயங்காமல் சிகாமாட் தொகுதியை ஏற்றுக் கொள்ளுங்கள். சிகாமாட் அம்னோ தொகுதியின் தலைவரே நான்தான். எனவே, அம்னோவினரை முழு மூச்சாக உங்களுக்காக தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடச் செய்கிறேன். சிகாமாட்டை அடுத்துள்ள லாபிஸ் தொகுதியில்தான் நானும் போட்டியிடுகிறேன். எனவே, சிகாமாட் தொகுதியில் உங்களுக்காக நானே நேரடியாக வந்து பிரச்சாரம் செய்கிறேன். எனவே, நீங்கள் தயங்காமல் சிகாமாட் வாருங்கள். நான் பார்த்துக் கொள்கிறேன். உங்களை வெற்றி பெறச் செய்கிறேன்” என சுப்ராவிடம் வற்புறுத்தினார் மூசா.

அந்த நாள் நினைவுகள் – மகாதீர், மூசா ஹீத்தாம், துங்கு ரசாலி

மூசாவின் அந்த ஆறுதல் வார்த்தைகளால் – வாக்குறுதிகளால் – ஈர்க்கப்பட்டு மனம் மாறினார் சுப்ரா. சிகாமாட்டில் போட்டியிட முன்வந்தார். அப்போது, மஇகா கூட்டரசுப் பிரதேசத்தின் நிர்வாகச் செயலாளர் என்ற முறையில் சுப்ராவுடன் (அப்போது சுப்ரா மஇகா கூட்டரசுப் பிரதேசத் தலைவராகவும் இருந்தார்) நான் நெருக்கமாகப் பணியாற்றிக் கொண்டிருந்த காரணத்தால், அவருடனே சிகாமாட் சென்று 2 வாரங்கள் அங்கேயே தங்கியிருந்து தேர்தல் பணிகளில் ஈடுபட்டேன்.

வாக்குறுதி அளித்தது போலவே, மூசா ஹீத்தாம் நேரடியாக பல கூட்டங்களில் சுப்ராவுக்காகப் பிரச்சாரம் செய்தார். பக்கத்து தொகுதி என்பதால் மூசா ஹீத்தாம் சிகாமாட் நிலவரங்களை அடிக்கடி நேரில் கண்டறிந்தார். சிகாமாட் அம்னோ தொகுதியின் தலைவர் என்ற முறையிலும் சுப்ராவின் வெற்றிக்காக அம்னோவினரை பாடுபட வைத்தார்.

சுப்ராவும் சிகாமாட்டில் வெற்றி பெற்றார்.

சிகாமாட் அம்னோ பேராளர் மாநாடுகளில் சுப்ரா

1982 பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றதோடு தொடர்ந்து 1986 பொதுத் தேர்தலிலும் சிகாமாட் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் சுப்ரா. அவர் துணையமைச்சராகவும் இருந்ததால் மூசாவுடன் நெருக்கம் அதிகரித்தது. அரசியலுக்கு அப்பாற்பட்டு இருவரும் நெருங்கிய நட்பு கொண்டிருந்தனர்.

ஒவ்வோர் ஆண்டும் சிகாமாட் அம்னோ தொகுதி பேராளர் மாநாட்டில் அந்தத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் தவறாமல் கலந்து கொள்வார் சுப்ரா, அந்தப் புள்ளியில்தான் அவருக்கான அரசியல் சிக்கலும் நிகழ்ந்தது.

தீபாவளி விருந்துபசரிப்பில் சுப்ரா இல்லத்தில் துன் மகாதீர் தம்பதியர்

1986-ஆம் ஆண்டு மகாதீர், மூசா இடையில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட, துணைப் பிரதமராக, அம்னோ துணைத் தலைவராகப் பதவி விலகினார் மூசா. எனினும் சிகாமாட் அம்னோ தொகுதி தலைவராக தொடர்ந்து நீடித்தார்.

1987-ஆம் ஆண்டு நடைபெற்ற அம்னோ தேர்தலில் துங்கு ரசாலி போட்டியிடுவார் என ஆரூடங்கள் எழுந்தன. மூசா அவருக்கு ஆதரவளிப்பாரா? துங்கு ரசாலியும் மூசாவும் மகாதீரை எதிர்க்க ஓரணியாகத் திரள்வார்களா? என்ற எதிர்பார்ப்புகளும் உலாவரத் தொடங்கின.

அதற்கான முதல் அறிகுறி கோடிகாட்டப்பட்டது. சிகாமாட் அம்னோ தொகுதி கூட்டத்தைத் திறந்து வைக்க துங்கு ரசாலி அழைக்கப்பட்டிருக்கிறார் என்ற அறிவிப்புதான் அந்த அறிகுறி. 1987-ஆம் ஆண்டில் ஒரு குறிப்பிட்ட நாளில் சிகாமாட் அம்னோ பேராளர் மாநாட்டைத் திறந்து வைக்க துங்கு ரசாலி சிகாமாட் வந்தார். மூசாவும் சிகாமாட் அம்னோ தலைவர் என்ற முறையில் கலந்து கொண்டார்.

சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினர் என்பதால் சுப்ராவும் வேறு வழியின்றி அழைப்பை ஏற்று, கடந்த ஆண்டுகளைப் போன்றே அந்த சிகாமாட் அம்னோ பேராளர் மாநாட்டில் கலந்து கொண்டார்.

அந்தப் பேராளர் மாநாட்டுக்கு நானும் சுப்ராவுடன் சென்றிருந்தேன். பேராளர் மாநாடு தொடங்குவதற்கு முன்னர் ஒரு தனியார் வீட்டில் அழைக்கப்பட்ட பிரமுகர்கள் வந்து சேர்ந்தனர். அங்கு மூசா ஹீத்தாம், துங்கு ரசாலியுடன், சுப்ராவும் சென்றிருந்தார். அந்த இல்லத்திலிருந்து மூவரும் (மூசா ஹீத்தாம், துங்கு ரசாலி, சுப்ரா) ஒன்றாக வெளியேறும் புகைப்படம் ஒன்றை ஆசியாவீக் என்ற அனைத்துலக சஞ்சிகை வெளியிட்டது.

இதனால் சுப்ரா மகாதீருக்கு எதிராக – துங்கு ரசாலி, மூசா ஹீத்தாமை ஆதரிக்கிறார் என்பது போன்ற தோற்றம் ஏற்பட்டது.

அந்த 1987 அம்னோ தேர்தலில்  துங்கு ரசாலி – மூசா அணியினர் தோல்வியடைந்து அம்னோ பிளவுகண்டு, அரசியல் திசை மாறியது இன்னொரு வரலாறு.

1987 மஇகா போராட்டம்

டான்ஸ்ரீ சுப்ரா

1987 – மஇகா அரசியலிலும் புயல் வீசிய ஆண்டு. டத்தோ ஜி.பாசமாணிக்கம், டத்தோ மகாலிங்கம், டத்தோ முத்து பழனியப்பன் மூவரும் ஓரணியாக சாமிவேலு ஆதரவுடன் 3 உதவித் தலைவர்கள் பதவிகளுக்குப் போட்டியிட்டனர். அப்போது நடப்பு உதவித் தலைவர்கள் டத்தோ கு.பத்மநாபன், டத்தோ எம்.ஜி.பண்டிதன் இருவரும்! அவர்களோடு உலுசிலாங்கூர் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ எஸ்.எஸ்.சுப்பிரமணியமும் சேர்ந்து கொண்டார். பத்மாவின் அணிக்கு சுப்ரா ஆதரவு தெரிவித்தார்.

போட்டியில் பத்மா-பண்டிதன்-எஸ்.எஸ்.சுப்பிரமணியம் வெற்றி பெற்றனர். சாமிவேலு ஆதரவு பெற்றும் டத்தோக்கள் கூட்டணி தோல்வியடைந்ததால் சாமிவேலுவின் செல்வாக்கு கட்சியில் குறைந்து விட்டது என்பது போன்ற பிரச்சாரங்கள் எழுந்தன.

அதைத் தொடர்ந்து மீண்டும் சாமிவேலு-சுப்ரா மோதல் மஇகாவில் வெடித்தது. இந்த சமயத்தில் துங்கு ரசாலி, மூசா ஹீத்தாம், சுப்ரா மூவரும் இணைந்து அம்னோ சிகாமாட் பேராளர் மாநாட்டில் கலந்து கொண்ட புகைப்படத்தை வைத்து சுப்ரா, பிரதமர் மகாதீருக்கு எதிராக செயல்பட்டார் என்ற பிரச்சாரங்கள் மஇகாவிலும் மேற்கொள்ளப்பட்டன.

சுப்ராவும் மகாதீரைச் சந்தித்து விளக்கம் தர வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானார். எனினும் மகாதீர் அதையெல்லாம் பெரிதாகப் பொருட்படுத்தவில்லை . அவருக்கும் சுப்ராவுக்கும் இடையில் நல்லுறவு தொடர்ந்தது. அந்த சம்பவங்களுக்குப் பின்னரும் பல சந்தர்ப்பங்களில் மகாதீர், சுப்ராவுக்கு அரசியல் ரீதியாக கைகொடுத்து உதவினார்.

அந்த சம்பவங்களை விவரித்தால் இன்னொரு நான்கு பக்க கட்டுரையாக விரிவடையும்! எனவே, அவை குறித்து பிறிதொரு நாளில்…!

-இரா.முத்தரசன்