இந்தப் படத்தின் இரண்டு அம்சங்களைக் கேள்விப்பட்டால் இரசிகர்கள் உடனேயே பார்ப்பதற்கு திரையரங்குக்கு படையெடுத்து விடுவார்கள். இந்தப் படத்தின் மலையாள மூலமான ‘மெமரீஸ்’ படத்தை இயக்கியதும் கதை எழுதியதும், அண்மையில் வெளிவந்த ‘பாபநாசம்’ படத்தின் இயக்குநர் ஜீத்து ஜோசப் என்பது ஒன்று.
மற்றொன்று, படத்தின் இயக்குநர் அறிவழகன். பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் முன்னாள் துணை இயக்குநர்களில் ஒருவர் என்பதோடு, ஏற்கனவே வெளிவந்த ‘ஈரம்’ படத்தின் மூலம் தமிழத் திரையுலகைத் தன்பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தவர்.
ஆனால், பல விஷயங்களில் இருவருமே நமது எதிர்பார்ப்புகளை ஏமாற்றி விட்டார்கள் என்பதுதான் உண்மை. படத்தில் சில காட்சிகளை நீக்கி விட்டு, சில காட்சிகளைச் சுருக்கியிருந்தால் படத்தின் விறுவிறுப்பு மேலும் கூடியிருக்கும்.
படத்தை ஓரளவுக்காவது காப்பாற்றியிருப்பது, நம்மால் நம்ப முடியாத ஒரு விஷயம் – அதுதான் அருள்நிதியின் நடிப்பு!
ஒரு ரவுடியை எண்கவுண்டர் எனப்படும் சுட்டுக்கொல்லும் காவல் துறையின் முயற்சியுடன் தொடங்குகின்றது படம். போலீஸ் அதிகாரியான அரவிந்த் (அருள்நிதி) தவறுதலாகத் தாங்கள் தேடிவந்த ரவுடியின் மனைவியைச் சுட்டுக் கொன்றுவிட, அடுத்து, ரவுடியைக் கொல்லப் போகும் தருணத்தில் தனது மேலதிகாரிகளின் உத்தரவால் ரவுடியைக் கொல்லாமல் விட்டு விடுகின்றார் அருள்நிதி.
அடுத்தடுத்த காட்சிகளில், படம் 4 ஆண்டுகளுக்குப் பின்னர் என நகரும்போது, மனைவி மகளை இழந்து, மதுவும் கையுமாக சுற்றிக் கொண்டிருக்கும் அருள்நிதியைப் பார்க்கும்போதே நமக்கும் தெரிந்து விடுகின்றது. தப்பிய ரவுடிதான் அவர்களைச் சுட்டுக் கொன்றிருப்பான் என்று!
இதற்கிடையில், அங்கொன்றும் இங்கொன்றுமாக நடைபெறும் தொடர் கொலைகளைக் கண்டுபிடிக்க மீண்டும் பணியில் சேரும் அருள்நிதி, தொடர் கொலைகளை சாமர்த்தியமாக எப்படி முடிச்சு போடுகின்றார், கொலையாளியைக் கண்டு பிடிக்கின்றார் என்பதுதான் எஞ்சிய திரைக்கதை.
படத்தில், இயக்குநர் உட்பட அனைவரும் கடுமையாக உழைத்திருப்பது திரையில் நன்றாகத் தெரிகின்றது. குறிப்பாக, கதாநாயகன் அருள்நிதி!
தனது அண்ணன் உதயநிதி ஸ்டாலினைவிட சிறந்த நடிகர் என்பதைக் காட்டியிருக்கின்றார் அருள்நிதி. போலீஸ் அதிகாரிக்கே உரிய உடல் கட்டு, மிடுக்கு, கம்பீரம் என மிரட்டியிருக்கும் அருள்நிதி, அதே நேரத்தில் மனைவி, மகளை இழந்து தாடியுடன் தண்ணியடித்துக் கொண்டு, உடல் தளர்ந்து போய் திரிவதையும் தத்ரூபமாகக் காட்டியிருக்கின்றார். கச்சிதமான நடிப்பு!
படத்திற்கு பலம் சேர்க்கும் மற்றொரு அம்சம் இசை. இசையமைத்திருக்கும் எஸ்.எஸ்.தமன், ஷங்கரின் பாய்ஸ் படத்தில் கதாநாயகப் பையன்களில் ஒருவராக வந்தவர். சாதாரணமாக அருள்நிதி காட்டப்படும் – நடந்து செல்லும் – இடங்களில் கூட அதிரடியான இசையை வழங்கி படத்திற்கு விறுவிறுப்பைக் கூட்டியிருக்கின்றார்.
ஆனால், இறுதிக் காட்சிகளில் அருள்நிதி, கொலையாளியை ஓடிக் கொண்டே விரட்டிச் செல்லும் காட்சிகளில் மட்டும் பின்னணி இசை விறுவிறுப்பில்லாமல் சொதப்பிவிட்டது.
கதாநாயகியாக வரும் காக்காமுட்டை அம்மா ஐஸ்வர்யா இளமையுடன் அழகாகத் தெரிகின்றார் என்றாலும் வாய்ப்புகள் அதிகம் இல்லை. சில காட்சிகளில் மட்டுமே வருகின்றார்.
அரவிந்த் சிங்கின் ஒளிப்பதிவும், பாராட்டுக்களைப் பெறுகின்றது.
படத்தின் பலவீனங்கள்
போலீஸ் எண்கவுண்டர், தொடர் கொலைகள், என்று வரும்போது எத்தனை விறுவிறுப்பு இருந்திருக்க வேண்டும் படத்தில்! இரசிகர்களை நாற்காலியின் நுனிக்கே கொண்டு வந்திருக்க வேண்டாமா?
ஆனால், இயக்குநரோ, படத்தை மெதுவோட்டமாக நடத்துகின்றார். திரும்பத் திரும்ப அருள்நிதி தண்ணியடித்துக் கொண்டே இருப்பதையும், தனது மனைவி மகள்களை நினைத்துக் கொண்டே இருப்பதையும் காட்டிக் கொண்டே இருக்கின்றார்.
படத்தின் கிளைமாக்ஸ் நெருங்க, நெருங்க படத்தில் பதட்டம் அதிகரித்திருக்க வேண்டும் என்பதைவிட, குழப்பங்களே அதிகரிக்கின்றன. அதிலும் கொலையாளியின் முகம் அதுவரை படத்தில் காட்டப்படவில்லை என்பதோடு, இதுவரை வராத ஒரு கதாபாத்திரம் என்பதால், அதனைக் காட்டுவதில் ஏன் இயக்குநர் அவ்வளவு தூரம் மர்மத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்?
கொலையாளியின் கணினி, கைத்தொலைபேசிகளில் இருக்கும் சிறுமி யார்? அருள்நிதியின் மகளா? அல்லது கல்லூரி முதல்வர் பெண்மணியின் மகளா? இப்படியாக படம் முடியும்போது பல்வேறு குழப்பங்களுடன் வெளியே வரும் நிலைமைக்கு ஆளாக்கி விட்டார் இயக்குநர் அறிவிழகன்.
அதேபோல, நிருபராக வரும் பெண்ணும் கடைசியில் என்ன ஆனார் என்பதைக் காட்டவில்லை.
இந்தக் குழப்பங்களினால், படத்தைப்போய்ப் பாருங்கள் என மற்றவர்களைப் பார்த்துக் கூற நமக்கும் வாய்வரவில்லை.
அருள்நிதியின் நடிப்பைப் பயன்படுத்திக் கொண்டது போல், திரைக்கதையிலும், படத் தொகுப்பிலும் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் அறிவழகன் வெற்றியடைந்திருப்பார்.
-இரா.முத்தரசன்