லிஸ்பான் (போர்ச்சுக்கல்) – 126 ஆண்டுகள் பழமை வாய்ந்த 16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த போர்ச்சுகீசிய மன்னரின் சிலை ஒன்று, இளைஞர் ஒருவரின் தம்படம் (செல்ஃபி) எடுக்கும் முயற்சியால், கீழே சரிந்து உடைந்து நொறுங்கி சிதறிப் போய்விட்டதாக லிஸ்பான் நகர காவல்துறை தெரிவித்துள்ளது.
போர்ச்சுக்கல் தலைநகர் லிஸ்பானில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு, ஓர்னாடே ரோசியோ இரயில் நிலையத்திற்கு வெளியே முகப்பில் வைக்கப்பட்டிருந்த மன்னர் டாம் செபாஸ்டினோ சிலையின் மீது ஏறி தம்படம் எடுக்க முயற்சி செய்திருக்கிறார் இளைஞர் ஒருவர்.
அப்போது எதிர்பாராத விதமாக அச்சிலை கீழே விழுந்து நொறுங்கிவிட்டதாகக் கூறப்படுகின்றது.
இச்சம்பவத்தையடுத்து, அவ்விடத்தில் இருந்து உடனடியாகத் தப்பி ஓட நினைத்த அவரை, காவல்துறை பிடித்து நீதிமன்றத்தில் நிறுத்தியுள்ளது.
போர்ச்சுகீசிய வரலாற்றில், 1557 மற்றும் 1578-க்கு இடைப்பட்ட காலத்தில் மன்னர் டான் செபாஸ்டியோ ஆட்சி செய்திருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மொரோக்கோவில் தன்னால் உருவாக்கப்பட்ட புனிதப் போரின் போது, அப்போது 24 வயதே நிரம்பியிருந்த டான் செபாஸ்டியோ கொல்லப்பட்டதாகவும் வரலாற்றில் கூறப்பட்டுள்ளது.