Home உலகம் ஈரோ 2020 : பெல்ஜியம் 1 – போர்ச்சுகல் 0; ரொனால்டோவால் காப்பாற்ற முடியாத போர்ச்சுகல்

ஈரோ 2020 : பெல்ஜியம் 1 – போர்ச்சுகல் 0; ரொனால்டோவால் காப்பாற்ற முடியாத போர்ச்சுகல்

918
0
SHARE
Ad

செவில் (ஸ்பெயின்) : ஈரோ 2020 ஐரோப்பியக் கிண்ணக் காற்பந்து போட்டிகளில் தற்போது நடைபெற்று வரும் 16 குழுக்களுக்கிடையிலான ஆட்டத்தில் சிறிய நாடான பெல்ஜியம் 1-0 என்ற கோல் எண்ணிக்கையில் பலம் வாய்ந்த போர்ச்சுகல் குழுவைத் தோற்கடித்து மீண்டும் ஐரோப்பியக் கிண்ணத்தை வெல்லும் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் கனவுகளைச் சிதைத்தது.

இந்த இரண்டு குழுக்களுக்கிடையிலான ஆட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஜூன் 27-ஆம் தேதி ஸ்பெயின் நாட்டின் செவில் நகரில் (மலேசிய நேரப்படி இன்று திங்கட்கிழமை அதிகாலை 3.00 மணி) நடைபெற்றது.

2016-இல் ரொனால்டோவின் சிறப்பான ஆட்டம், தலைமைத்துவத்தால் ஐரோப்பியக் கிண்ணத்தைக் கைப்பற்றிய போர்ச்சுகல் இந்த முறையும் ரொனால்டோ தொடர்ந்து விளையாடியதால் தொடர்ச்சியாக இரண்டாவது முறையும் ஐரோப்பியக் கிண்ணத்தை வெல்ல இலக்கு கொண்டிருந்தது.

#TamilSchoolmychoice

எனினும் ரொனால்டோ இருந்தும் போர்ச்சுகலின் கனவுகள் சிதைந்தன. பெல்ஜியத்திடம் நேற்று அடைந்த தோல்வியால் போர்ச்சுகல் ஐரோப்பியக் கிண்ணப் போட்டிகளில் இருந்து வெளியேறுகிறது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் செக் குடியரசு 2-0 என்ற கோல் எண்ணிக்கையில் நெதர்லாந்தைத் தோற்கடித்தது.

அடுத்த சுற்றுக்குத் தேர்வான 16 குழுக்கள்

மொத்தம் 24 நாடுகள் கலந்து கொண்ட ஐரோப்பியக் கிண்ணக் காற்பந்து போட்டிகளில் அந்த நாடுகள் ஒரு பிரிவுக்கு 4 நாடு என்ற கணக்கில் 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டன.

இதில் ஒவ்வொரு பிரிவிலும் சிறந்த 2 குழுக்கள் என்ற அளவில் 12 நாடுகள் 6 பிரிவுகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டன.

மேலும் சிறந்த 3 இடத்தைப் பெற்ற 4 குழுக்களும் கூடுதலாகத் தேர்வு செய்யப்பட்டன.

தேர்வு செய்யப்பட்ட இந்த 16 குழுக்களுக்கு இடையிலான போட்டிகள் சனிக்கிழமை ஜூன் 26 முதல் தொடங்கின.

6 பிரிவுகளில் சிறந்த குழுக்களாகத் தேர்வு பெற்ற 6 நாடுகள் பின்வருமாறு:

  1. இத்தாலி
  2. பெல்ஜியம்
  3. நெதர்லாந்து
  4. இங்கிலாந்து
  5. சுவீடன்
  6. பிரான்ஸ்

6 பிரிவுகளில் சிறந்த 2-வது குழுவாகத் தேர்வான 6 நாடுகள் பின்வருமாறு:-

  1. வேல்ஸ்
  2. டென்மார்க்
  3. ஆஸ்திரியா
  4. குரோஷியா
  5. ஸ்பெயின்
  6. ஜெர்மனி

பிரிவுகளில் சிறந்த 3-வது குழுவாகத் தேர்வாகும் நாடுகள் :-

  1. சுவிட்சர்லாந்து
  2. செக் குடியரசு
  3. உக்ரேன்
  4. போர்ச்சுகல்

அடுத்து 16 குழுக்களுக்குள் இடையிலான போட்டிகள் பின்வருமாறு நடைபெறும்:

26/06: வேல்ஸ் – டென்மார்க் (நடைபெறும் இடம் ஆம்ஸ்டர்டாம்)

26/06: இத்தாலி – ஆஸ்திரியா (நடைபெறும் இடம் இலண்டன்)

27/06: நெதர்லாந்து – செக் குடியரசு (நடைபெறும் இடம் புடாபெஸ்ட்)

27/06: பெல்ஜியம் – போர்ச்சுகல் (நடைபெறும் இடம் செவில்)

28/06: குரோஷியா – ஸ்பெயின் (நடைபெறும் இடம் கோப்பன்ஹேகன்)

28/06: பிரான்ஸ் – சுவிட்சர்லாந்து (நடைபெறும் இடம் புச்சாரெஸ்ட்)

29/06: இங்கிலாந்து – ஜெர்மனி (நடைபெறும் இடம் இலண்டன்)

29/06: சுவீடன் – உக்ரேன் (நடைபெறும் இடம் கிளாஸ்கோ)