Home நாடு கொவிட் தடுப்பூசி : கைரி ஜமாலுடின் – சிலாங்கூர் அரசாங்கம் மோதல்

கொவிட் தடுப்பூசி : கைரி ஜமாலுடின் – சிலாங்கூர் அரசாங்கம் மோதல்

756
0
SHARE
Ad

கோலாலம்பூர் : கொவிட்-19 பாதிப்புகளைத் தொடர்ந்து தொடக்கம் முதற்கொண்டே சிலாங்கூர் மாநில அரசாங்கத்திற்கும், மத்திய அரசாங்கத்திற்கும் இடையில் மோதல்கள் நடந்து வருகின்றன.

சிலாங்கூர் மாநில அரசாங்கம் கொவிட்-19 நிலைமையைக் கருத்தில் கொண்டு முன்னாள் சுகாதார அமைச்சரும் கோல சிலாங்கூர் நாடாளுமன்ற உறுப்பினருமான சுல்கிப்ளி அகமட்டை ஒருங்கிணைப்புக் குழுத்தலைவராக நியமித்தது.

அப்போது முதல் அவர் மத்திய அரசாங்கம் புள்ளிவிவரங்களை முறையாகப் பகிர்ந்து கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து வருகிறார்.

#TamilSchoolmychoice

இந்நிலையில் மத்திய அரசாங்கத்தின் தடுப்பூசித் திட்டத்தின் ஒருங்கிணைப்பு அமைச்சரான கைரி ஜமாலுடின் உண்மை நிலவரங்களை எடுத்துக் கூற வேண்டும் என சிலாங்கூர் ஆட்சிக் குழு உறுப்பினரான சித்தி மரியா சாடியிருந்தார்.

“சிலாங்கூர் தடுப்பூசி விநியோகத்தில் பிரச்சனைகளை எதிர்நோக்கவில்லை. மாறாக, தடுப்பூசிகளை வைத்திருப்பதற்கும், போடுவதற்குமான போதிய திறன்களைக் கொண்டிருக்கவில்லை” என கைரி கூறியிருந்தார்.

இதற்கு பதிலடி கொடுத்த சித்தி மரியா “அமைச்சருக்குக் களத்தில் என்ன நடக்கிறது என்பதே தெரியவில்லை போலும். அவர் இப்படியே கூறிக் கொண்டிருந்தால் சிலாங்கூரில் சில தடுப்பூசி போடப்படும் இடங்கள் தற்காலிகமாக மூட வேண்டிய நிலைமை ஏற்படும்” எனக் கூறியிருந்தார்.

ஏற்கனவே, சிலாங்கூர் சுல்தானும் கடந்த ஜூன் 8-ஆம் தேதி விடுத்த அறிக்கையில், மிக மோசமான பாதிப்புகளைக் கண்டிருக்கும் சிலாங்கூர் மாநிலத்திற்கு குறைவான அளவிலேயே கொவிட் தடுப்பூசிகள் வழங்கப்பட்டிருக்கின்றன என்பது குறித்து கண்டனம் தெரிவித்திருந்தார்.

சிலாங்கூர் மீது மத்திய அரசாங்கம் எதிர்மறையாக பாரபட்சம் காட்டினால் அதனால் நாடு முழுமையிலும் பாதிப்புகள் ஏற்படும் எனவும் சித்தி மரியா எச்சரித்தார்.

ஆனால், கைரி ஜமாலுடின் “சிலாங்கூர் ஒரு நாளைக்கு 20 ஆயிரம் தடுப்பூசிகள் மட்டுமே போட்டு வந்தது. தற்போது இது 50 ஆயிரமாக உயர்ந்திருக்கிறது. ஆனால், ஒரு நாளைக்கு 100,000 தடுப்பூசிகளை சிலாங்கூர் போட வேண்டும். இதில்தான் சிலாங்கூர் பிரச்சனையை எதிர்நோக்குகிறதே தவிர, ஜூன், ஜூலை மாதங்களுக்கான போதுமான தடுப்பூசிகளை நாங்கள் வழங்கியிருக்கிறோம்” என்று கூறியிருந்தார்.

சிலாங்கூர் சொந்தத் தடுப்பூசித் திட்டம்

இன்று திங்கட்கிழமை ஜூன் 28 முதல் சிலாங்கூர் சொந்தத் தடுப்பூசி போடும் திட்டத்தை செயல்படுத்தத் தொடங்கியுள்ளது.

மாநில அரசாங்கம் மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனமான பார்மாநியாகாவிடமிருந்து சினோவிக் கொரொனா வாக் என்ற தடுப்பூசியை நேரடியாக வாங்கி சிலாங்கூர் மக்களுக்கு போடும் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.

இதற்காக மாநில அரசாங்கம் 200 மில்லியன் ரிங்கிட் செலவிட்டு 2.5 மில்லியன் அளவை கொண்ட தடுப்பூசிகளை வாங்கியிருக்கிறது என சிலாங்கூர் மந்திரி பெசார் அமிருடின் ஷாரி தெரிவித்திருந்தார்.

இந்தத் திட்டத்திற்கு வேக்சின் சிலாங்கூர் (Vaksin Selangor) என பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. இந்தத் திட்டத்தின் மூலம் தடுப்பூசியை தனது மக்களுக்கு விரைவாகவும், அதிகமாகவும் செலுத்த சிலாங்கூர் இலக்கு கொண்டிருக்கிறது.

வணிக நிறுவனங்களும் நேரடியாக சிலாங்கூர் மாநில அரசாங்கத்திடம் இருந்து தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்து தங்களின் ஊழியர்களுக்குச் செலுத்தும் வசதிகளையும் சிலாங்கூர் அரசாங்கம் ஏற்படுத்தித் தந்திருக்கிறது.