Home நாடு சிலாங்கூர் சுல்தானும் முஸ்லீம்களுக்கான வழிகாட்டுதல்களை நிராகரித்தார்!

சிலாங்கூர் சுல்தானும் முஸ்லீம்களுக்கான வழிகாட்டுதல்களை நிராகரித்தார்!

58
0
SHARE
Ad

கிள்ளான்: முஸ்லிம் அல்லாதவர்களின் விழாக்களில் முஸ்லிம்கள் கலந்து கொள்வதற்கான வழிகாட்டுதல்களை அமைக்கும் முன்மொழிவை சிலாங்கூர் சுல்தான் ஷாராபுடின் இட்ரிஸ் ஷா நிராகரித்துள்ளார்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் நேற்று வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 7) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த வழிகாட்டுதல்கள் நிராகரிக்கப்பட்டதாகக் கூறியிருந்தார்.

இன்று சனிக்கிழமை (பிப்ரவரி 8) இஸ்தானா ஆ லாம் ஷா வெளியிட்ட அறிக்கையில், குறிப்பாக சிலாங்கூரில் இந்த முன்மொழிவுக்கு எதிராக சுல்தான் ஷாராபுடின் கடும் மறுப்பை தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

“சிலாங்கூரில் இஸ்லாமியத் தலைவராக, பல்வேறு இனங்கள் மற்றும் மதங்களைச் சேர்ந்த மக்கள் தேசிய ஒற்றுமையை வளர்க்க நல்லெண்ணத்தை வலுப்படுத்தி வரும் இந்த நேரத்தில் பொருத்தமற்ற இந்த முன்மொழிவு செய்யப்பட்டுள்ளதாக சுல்தான் கருத்து தெரிவித்துள்ளார்,” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தற்போதுள்ள சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கக்கூடிய வகையில் மக்களிடையே அசௌகரியத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் சுல்தான் கருதுகிறார் எனவும் அந்த அறிக்கை மேலும் குறிப்பிட்டது.

காலம் காலமாக திருக்குர்ஆன் மற்றும் சுன்னா வழியாக இஸ்லாம் சிறந்த வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளதாக சுல்தான் கூறினார். மலேசிய முஸ்லிம்களிடையே அஹ்லி சுன்னா வல் ஜமாஅவின் கோட்பாடுகளால் இது மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளது.

“எனவே இத்தகைய நடைமுறைகளால் (முஸ்லிம் அல்லாத கொண்டாட்டங்களில் கலந்து கொள்வது) நம்பிக்கை விலகல் என்ற கேள்வி எழவில்லை, ஏனெனில் முஸ்லிம்கள் மத எல்லைகளை புரிந்து கொண்டுள்ளனர் மற்றும் நன்மை தீமைகளை மதிப்பிட முடியும் என்பதால் அவர்களை எளிதில் பாதிக்க முடியாது எனவும் சுல்தான் நம்புகிறார்,” என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பன்முக சமூகமாக, மத சகிப்புத்தன்மையை சமரசம் செய்ய கூடாது என்றும், அதே நேரத்தில் மலேசிய அரசியலமைப்பில் உறுதி செய்யப்பட்டுள்ள கூட்டாட்சி மதமாக இஸ்லாம் மதிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்றும் சுல்தான் ஷாராபுடின் அனைவருக்கும் நினைவூட்டினார்.