Home நாடு சிலாங்கூர் வரவு செலவுத் திட்டம் : இந்திய சமூகத்தினருக்குக் கிடைக்கும் பலன்கள் – பாப்ப ராயுடு...

சிலாங்கூர் வரவு செலவுத் திட்டம் : இந்திய சமூகத்தினருக்குக் கிடைக்கும் பலன்கள் – பாப்ப ராயுடு அறிவிப்பு

291
0
SHARE
Ad
பாப்ப ராயுடு – சிலாங்கூர் ஆட்சிக் குழு உறுப்பினர்

ஷா ஆலாம் : சிலாங்கூர் மாநிலத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நேற்று வெள்ளிக்கிழமை (நவம்பர் 15) சிலாங்கூர் சட்டமன்றத்தில் சிலாங்கூர் மந்திரி பெசார் அமிருடின் ஷாரி தாக்கல் செய்தார்.

அந்தத் திட்டத்தில் சிலாங்கூர் வாழ் இந்திய சமூகம் அடையக் கூடிய பலன்களை சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினரும், பந்திங் சட்டமன்ற உறுப்பினருமான வீ. பாப்ப ராயுடு பட்டியலிட்டார்.

2025 ஆம் ஆண்டுக்கான சிலாங்கூர் மாநிலத்துக்கான வரவு செலவுத் திட்டத்தில்  இஸ்லாம் அல்லாத வழிபாட்டுத் தலங்களுக்கு 80 லட்சம் ரிங்கிட் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

கடந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் இஸ்லாம் அல்லாத வழிபாட்டுத் தலங்களுக்கு 60 லட்சம் ரிங்கிட் ஒதுக்கப்பட்டது. இந்த ஆண்டுக்கான நிதி ஒதுக்கீடு 80 இலட்சம் ரிங்கிட்டாக உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும், சிலாங்கூர் மாநில தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் மன்றத்திற்கு மாநில அரசின் சார்பில் 200,000 வெள்ளி மானியம் வழங்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் வழங்குவது உள்ளிட்ட கல்வி சார்ந்த மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்வதற்காக இந்த மானியம் வழங்கப்படுவதாக பாப்பராய்டு கூறினார்.

மாநிலத்திலுள்ள 99 தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டிற்காக மாநில அரசு ஒதுக்கீடு செய்துள்ள 50 லட்சம் வெள்ளி வருடாந்திர மானியத்திலிருந்து இந்த 200,000 வெள்ளி தலைமையாசிரியர் மன்றத்திற்கு வழங்கப்படுகிறது என்றார் அவர்.

தமிழ்ப் பள்ளிகளுக்கு 50 இலட்சம் ரிங்கிட்

சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள தமிழ்ப் பள்ளிகளுக்கு மீண்டும் 50 லட்சம் ரிங்கிட் மானியம் ஒதுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2008-ஆம் ஆண்டில் சிலாங்கூர் மாநிலத்தை பக்கத்தான் ராக்யாட் கூட்டணி கைப்பற்றியது முதல் சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள தமிழ்ப் பள்ளிகளுக்கு 40 லட்சம் ரிங்கிட் மானியம் ஒதுக்கப்பட்டது.

2013 ஆம் ஆண்டுக்கு பின்னர் இந்த மானியம் 50 லட்சம் ரிங்கிட்டாக உயர்த்தப்பட்டது. 2025-ஆம் ஆண்டுக்கும் 50 லட்சம் ரிங்கிட் மானியம் ஒதுக்கிய மந்திரி பெசாருக்கு பாப்பராயுடு நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

இதற்கிடையில், சிலாங்கூர் அரசுப் பணியாளர்களின் அர்ப்பணிப்பை அங்கீகரிக்கும் வகையில் இரண்டு மாத சம்பள ஊக்குவிப்புத் தொகை அவர்களுக்கு வழங்கப்படுகிறது.

இந்த ஊக்குவிப்புத் தொகை இரண்டு பகுதிகளாக வழங்கப்படும். முதல் பகுதி டிசம்பர் 31-ஆம் தேதியும், இரண்டாவது பகுதி அடுத்த ஆண்டு மார்ச் 25 ஆம் தேதியும் ஹரிராயா பெருநாள் கொண்டாட்டத்துடன் இணைந்து வழங்கப்படும்.

மலேசியாவில் RM400 பில்லியனுக்கும் அதிகமான பொருளாதார நடவடிக்கையை பதிவு செய்த முதல் மாநிலம் என்ற சாதனையையும் சிலாங்கூர் நிகழ்த்தியுள்ளது.  குறிப்பிட்டத்தக்கதாகும்.