வாஷிங்டன் : அமெரிக்காவின் அடுத்த அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது அரசாங்கத்தை அமைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளார்.
அவரின் அரசாங்கத்தில் அரசாங்கத்தின் திறன் சார்ந்த துறையாக (Department of Government Efficiency – DOGE) டோஜ் என்ற இலாகா உருவாக்கப்பட்டுள்ளது. இலாகாவின் பொறுப்பாளர்களாக எலோன் மஸ்க் – விவேக் ராமசாமி ஆகிய இருவரையும் நியமித்துள்ளார்.
எலோன் மஸ்க்கிற்கு அறிமுகம் தேவையில்லை. விவேக் ராமசாமி குடியரசுக் கட்சியின் சார்பில் அமெரிக்க அதிபருக்கான வேட்பாளராக டிரம்ப்பை எதிர்த்துப் போட்டியிட்டார் விவேக். எனினும் பின்வாங்கி டிரம்புக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார்.
டோஜ் என்பது ஏற்கனவே இயங்கும் அதிகாரப்பூர்வ அரசு துறை அல்ல. மாறாக புதிதாக அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படுபவர் இவ்வாறு புதிய அமைப்புகளை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்டங்கள் மூலம் உருவாக்குவார்.
இதற்கிடையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த துளசி கப்பார்ட் என்பவரை டிரம்ப் தேசிய உளவுத் துறையின் பொறுப்பாளராக நியமித்துள்ளார். துளசி கப்பார்ட்டின் நியமனத்தைப் பாராட்டிய இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “கடந்த 21 ஆண்டுகளாக இராணுவ ரிசர்வ் பிரிவில் லெப்டினன்ட் கர்னல் பதவி வகித்து நாட்டிற்கு சேவையாற்றியவர் நீங்கள். கடந்த காலங்களில் உங்களுடன் சந்திப்பு நடத்திய தருணங்களில் உங்களின் தெளிவான சிந்தனை குறித்தும் அர்ப்பண உணர்வு குறித்தும் நான் பெரிதும் ஈர்க்கப்பட்டேன்” என தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.
செனட்டர் மைக்கேல் வால்ட்ஸ் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகராகவும், செனட்டர் மார்கோ ரூபியோ வெளியுறவு அமைச்சராகவும் நியமிக்கப்பட பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.