புதுடெல்லி, மார்ச் 20- ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் இருந்து தி.மு.க. எம்.பி.க்கள் முறைப்படி விலகியதற்கான கடிதத்தினை நேற்றிரவு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்த டி.ஆர்.பாலு தலைமையிலான தி.மு.க. எம்.பி.க்கள் வழங்கினர்.
அத்துடன், இன்று பிரதமர் மன்மோகன் சிங்கை, நேரில் சந்தித்து அவரது அமைச்சரவையில் உள்ள 5 தி.மு.க. அமைச்சர்களும் தங்களது இராஜினாமா கடிதத்தினை வழங்க உள்ளனர்.
இதற்கிடையே ஜனாதிபதியை சந்தித்துவிட்டு வெளியே வந்த டி.ஆர்.பாலுவிடம், ‘ஆதரவை வாபஸ் பெறும் முடிவை மறுபரிசீலனை செய்வீர்களா?’ என நிருபர்கள் கேட்டனர்.
ஆதரவை வாபஸ் பெறும் கடிதத்தை ஜனாதிபதியிடம் வழங்கிய பிறகு மறுபரிசீலனைக்கு எங்கே இடம் உள்ளது? என அவர் பதில் அளித்தார்.
ஜனாதிபதியை டி.ஆர்.பாலு சந்தித்துவிட்டு வெளியே வந்த சில நிமிடங்களில் காங்கிரஸ் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் பிரதமர் மன்மோகன் சிங் வீட்டில் அவசரமாக நடைபெற்றது.
சுமார் ஒரு மணி நேரம் நீடித்த இந்த கூட்டத்தில் ஐ.நா.வில் கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானம் குறித்தும், தி.மு.க.வின் கோரிக்கை குறித்தும் தீவிர ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து டில்லி அரசியலில் பரபரப்பு காணப்படுகிறது. திருத்தங்களை ஏற்றால் பரிசீலிப்போம் என கருணாநிதி அறிவித்திருப்பதால் இன்றும் திடீர் அரசியல் திருப்பங்கள் நிகழலாம் என கூறப்படுகிறது.
இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பாராளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி கமல்நாத், சோனியா காந்தியின் அரசியல் ஆலோசகர் அகமது பட்டேல் மற்றும் மூத்த அமைச்சர்கள் பங்கேற்றனர்.