சென்னை – நேற்று சனிக்கிழமை தமிழக சட்டமன்றத்தில் நடைபெற்ற அமளிகளைத் தொடர்ந்து, மெரினாவில் 144 தடை உத்தரவை மீறியதற்காகவும், மற்ற காரணங்களுக்காகவும், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மீதும் மற்ற திமுக தலைவர்கள் மீதும் தமிழகக் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்திருக்கின்றனர்.
“எத்தனையோ வழக்குகளைப் பார்த்தவர்கள் நாங்கள். இந்த வழக்கையும் எதிர்கொள்வோம்” என இது குறித்து ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.
சட்டமன்ற அமளிக்குப் பின்னர் நேற்று சனிக்கிழமை ஆளுநர் மாளிகை முன் குழுமிய ஸ்டாலின் அணியினரை தமிழக ஆளுநர் நேரில் அழைத்து விசாரித்தபோது….
மேலும் தமிழக அரசியல் நிலவரம் தொடர்பிலான அண்மையச் செய்திகள்:
- எதிர்வரும் பிப்ரவரி 22-ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஸ்டாலின் கைதானதைக் கண்டித்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படுகின்றது.
- நேற்று சட்டமன்றத்திற்கு வருகை தந்தபோது, ஸ்டாலினின் கார் காவல் துறையினரால் சோதனை செய்யப்பட்டது குறித்து விசாரணை நடத்தப்படும் என சட்டமன்ற அவைத் தலைவர் பி.தனபால் தெரிவித்தார்.
- தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட கடிதம் ஒன்றில் மு.க.ஸ்டாலின் நேற்று நடைபெற்ற சட்டமன்ற அமளிகள் தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
- இதற்கிடையில் தமிழக ஆளுநர் இன்று ஞாயிற்றுக்கிழமை தமிழக முதல்வராக நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற எடப்பாடி பன்னீர் செல்வத்தைச் சந்தித்தார். நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்ற விதம் குறித்து ஆளுநருக்கு அவர் விளக்கமளித்தார். அவருடன் அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், மற்றும் செங்கோட்டையன் உள்ளிட்ட அமைச்சர்கள் உடன் சென்றனர்.
- அதே வேளையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தையும் அவரது அணியினரையும் தமிழக ஆளுநர் சந்தித்தார். பன்னீர் செல்வம் சார்பில் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய மாஃபா பாண்டியராஜன், தமிழக சட்டமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பை செல்லாது என அறிவிக்க வேண்டும் என ஆளுநரிடம் வலியுறுத்தினோம் எனக் கூறியுள்ளார்.
- இதற்கிடையில், ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் தேர்தல் ஆணையத்திடம் சசிகலா அதிமுக பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முறை செல்லாது என புகார் அளித்திருக்கின்றனர். இதற்கு விளக்கம் தரும்படி சசிகலாவுக்கு தேர்தல் ஆணையம் கடிதம் ஒன்றை அவர் இருக்கும் பெங்களூரு சிறைச்சாலைக்கு அனுப்பியிருக்கிறது.