கடந்த வெள்ளிக்கிழமை, கொழும்புவில் முஸ்லிம்கள் நடத்திவந்த பல கடைகள் அடித்து நொறுக்கி, தீ வைக்கப்பட்டன. இச்சம்பவத்தில் பலருக்கு காயம் ஏற்பட்டது. வாகனங்களுக்கும் பெரும் சேதம் ஏற்பட்டது. இதனால் பதற்றம் ஏற்பட்டு பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டனர்.
இந்த வன்முறை சம்பவத்துக்கு ‘போது பாலா சேனா’ அமைப்பினர் காரணமாக இருப்பார்களா என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால் ”வன்முறையில் எங்கள் அமைப்புக்கு தொடர்பு இல்லை” என்று அந்த அமைப்பு மறுத்தது.
இந்நிலையில், வெஹிரஹெனா என்ற இடத்தில் ஒரு மத நிகழ்ச்சியில் அதிபர் ராஜபக்சே கலந்து கொண்டு பேசியதாவது:-
இலங்கை ஒரு ஜனநாயக நாடு. இங்கு புத்த மதத்தைச் சாராதவர்களுக்கும் சம உரிமை, சுதந்திரம் உண்டு. புத்த மதத்தினரின் உரிமைகளை நாம் பாதுகாக்கும் அதே சமயத்தில் மற்றவர்களின் உரிமைகளை பாதுகாப்பதில் புத்த மதத்தினர் முன்மாதிரியாக நடந்து கொள்ள வேண்டும்.
தாய் நாட்டை நேசிக்கும் அனைவரும் நாட்டில் இனம் மற்றும் மத ஒற்றுமை நிலவ முயற்சிக்க வேண்டும்.
இவ்வாறு ராஜபக்சே பேசினார்.