Home இந்தியா கருணாநிதி சிலையை சோனியா திறந்து வைக்கிறார் – தலைவர்கள் பங்கேற்பு

கருணாநிதி சிலையை சோனியா திறந்து வைக்கிறார் – தலைவர்கள் பங்கேற்பு

1256
0
SHARE
Ad

சென்னை – இங்கு அமைந்துள்ள திமுக தலைமையகமான  அறிவாலயத்தில் கருணாநிதியின் முழு உருவச் சிலையை இன்று காங்கிரசின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி திறந்து வைக்கிறார். மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுகவின் மூத்த தலைவர் க.அன்பழகன் தலைமையில் நடைபெறும் இந்த சிலை திறப்பு விழாவில் நாடு முழுமையிலுமிருந்து பல தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.

அதே வேளையில் காங்கிரஸ் கட்சி ஆளும் பாஜகவிற்கு எதிராக அணி திரட்டும் பிரம்மாண்டக் கூட்டணிக்கான ஒரு முன்னோடியாகவும் இந்த சிலை திறப்பு விழா பார்க்கப்படுகிறது.

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கேரளா முதல்வர் பினராய் விஜயன் ஆகியோர் கலந்து கொள்ளவிருக்கும் இந்த விழாவை பாஜகவுக்கு எதிரான கூட்டணியை கட்டமைக்கும் நோக்கில் ஸ்டாலின் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் என தமிழிசை சௌந்தரராஜன் போன்ற பாஜக தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

#TamilSchoolmychoice

இதற்கிடையே சிலையைத் திறந்து வைக்க வருகை தரும்  காங்கிரஸ் தலைவியான சோனியா, சென்னை மெரினா கடற்கரையில் அமைந்திருக்கும் கலைஞர் கருணாநிதி மற்றும் ஜெயலலிதாவின் நினைவிடங்களுக்கு சென்று மரியாதை செலுத்துவார் என்றும் சில ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

கருணாநிதி, ஜெயலலிதா இருவரின் இறுதிச் சடங்குகளிலும் சோனியா காந்தி கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அறிவாலயத்தில் சிலை திறப்பு விழா முடிவடைந்ததும் அங்கிருந்து சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ., மைதானத்துக்கு சென்று, அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் பொதுக்கூட்டத்தில் சோனியாவும் மற்ற தலைவர்களும் உரையாற்றுகின்றனர்.

கருணாநிதியின் சிலை திறப்பு விழாவில் நடிகர் ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.