Home Slider முடக்கப்பட்ட கிளைகளுக்கு புத்துயிர்: மஇகா தலைவர் போட்டிக்கு ஆயத்தமா?

முடக்கப்பட்ட கிளைகளுக்கு புத்துயிர்: மஇகா தலைவர் போட்டிக்கு ஆயத்தமா?

830
0
SHARE
Ad

Palanivel-Sliderஜனவரி 20 – திடீரென ம.இ.காவில் இதுவரை முடக்கப்பட்டிருந்த ம.இ.கா கிளைகள் மீண்டும் செயல்படலாம் என ம.இ.காவின் மத்திய செயலவை எடுத்திருக்கும் முடிவு பரவலான வரவேற்பைப் பெற்றிருந்தாலும், சில சலசலப்புக்களையும் உருவாக்கி இருக்கின்றது.

இத்தனை நாளாக இல்லாமல், முடக்கப்பட்ட கிளைகளின் மீது ஏன் இந்த திடீர் கரிசனம் என்ற கேள்வியும் இயல்பாகவே ம.இ.காவினர் மத்தியில் எழுந்துள்ளது.

அதிலும் குறிப்பாக, இந்த ஆண்டு ம.இ.காவில் கட்சித் தேர்தல் நடைபெறும் என்பதால் கடந்த ஆண்டு இறுதிக்குள்ளாகவே புதிய கிளைகளும் மறுசீரமைப்பு செய்யப்படும் கிளைகளும் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.

#TamilSchoolmychoice

அதை விடுத்து ஜனவரி மாதத்தில் இவ்வாறு முடக்கப்பட்ட கிளைகளை திறந்து விடுவது என்பது அண்மையக் கால ம.இ.கா சரித்திரத்தில் இதுதான் முதல் முறை.

பொதுத் தேர்தல் காரணமா?

பொதுத் தேர்தலை முன்னிட்டுதான் முடக்கப்பட்ட கிளைகள் திறந்து விடப்படுகின்றன எனக் காரணம் கூறப்பட்டாலும், ஆண்டுக் கணக்காக முடக்கப்பட்டிருந்த இந்த ம.இ.கா கிளைகளின் தலைவர்கள் பலர் எத்தனையோ காலமாக தங்களை மீண்டும் ம.இ.காவில் இணைத்துக் கொள்ள வாய்ப்பு வழங்கப்பட வேண்டுமென கேட்டுக் கொண்டே இருந்தனர்.

அப்போதெல்லாம் இவர்களை கண்டு கொள்ளாமல் இருந்த ம.இ.கா இப்போது திடீர்ப் பாசம் காட்டுவது எதிர்வரும் கட்சித் தேர்தல்களை கருத்தில் கொண்டுதான் என ம.இ.கா வட்டாரங்கள் சுட்டிக்காட்டின.

எதிர்வரும் பொதுத் தேர்தல் முடிந்தவுடன் ம.இ.காவில் கட்சித் தேர்தல்கள் தொடங்கி விடும். பொதுத் தேர்தல் கடுமையானதாக இருக்கும் என்பதால், ம.இ.கா மோசமாக தோல்வியுற்றால் கட்சியில் பதவிப் போராட்டம் தொடங்கி விடும்.

அப்படி ம.இ.கா மோசமாக பொதுத் தேர்தலில் தோல்வி கண்டால் முதல் கட்டமாக ம.இ.கா தேசியத் தலைவருக்கான தேர்தல் நடைபெறும்போது, நடப்பு தலைவர் ஜி.பழனிவேலுவை எதிர்த்து போட்டியிருக்குமா என்பதுதான் அனைவர் மனங்களிலும் தொக்கி நிற்கும் கேள்வி!

அவ்வாறு தேசியத் தலைவருக்கான போட்டி நடந்தால் தேசியத் தலைவர் தேர்தலில் வாக்களிக்கப் போகின்றவர்கள் ம.இ.கா கிளைத் தலைவர்கள்தான். எனவே, முடக்கப்பட்ட கிளைகளுக்கு புத்துயிர் அளிப்பதன் மூலம், அந்த ம.இ.கா கிளைகளின் தலைவர்கள் நன்றிக் கடனாக நடப்பு தலைமைத்துவத்திற்கே வாக்களிப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இதனால், தேசியத் தலைவருக்கு போட்டி என்று வருமானால் மீண்டும் புதிதாக திறக்கப்படும் முடக்கப்பட்ட கிளைகளின் ஆதரவும் நடப்பு தேசிய தலைவர் ஜி.பழனிவேலுவின் பக்கமே திரும்பும் எனக் கணக்கு போட்டுப் பார்த்துதான் முடக்கப்பட்ட கிளைகளுக்கு புத்துயிர் அளிக்கப்பட்டுள்ளது என ம.இ.கா வட்டாரங்கள் தெரிவித்தன.

இருப்பினும், பொதுத் தேர்தலில் ம.இ.கா எந்த அளவுக்கு வெற்றி பெறப் போகின்றது என்பதை வைத்துத்தான் ம.இ.காவில் தலைமைத்துவ போராட்டம் உருவெடுக்குமா அல்லது ஒன்றுமில்லாமல் அடங்கிப் போகுமா என்பது தெரியவரும்.