கோலாலம்பூர், ஜனவரி 20 – உத்தாரா பல்கலைக் கழக மாணவிக்கு ஆதரவாக நேற்று தலைநகர் பிரிக்பீல்ட்ஸ் லிட்டல் இந்தியா வட்டாரத்தில் கூடிய 20க்கும் மேற்பட்ட இந்திய அமைப்புக்கள், பவானிக்கு ஆதரவாக குரல் எழுப்பினர்.
பவானியை கருத்தரங்கில் பேச விடாமல் தடுத்த ஷரிபா மற்றும் பவானியை இந்தியாவுக்கு போ என்று சாடிய அம்னோவைச் சேர்ந்த நோர்ஹயாத்தி ஆகிய இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென காவல் துறையில் புகார் ஒன்றையும் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் செய்தனர்.
இந்த கூட்டத்தில் பவானியும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஷரிபா மற்றும் நோர்ஹயாத்தி மீது காவல் துறை நடவடிகை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்ட மலேசியத் தமிழர் பணிக்குழு ஒருங்கிணைப்பாளர் வேதமூர்த்தி அவ்வாறு நடவடிக்கை எடுக்கப்படுவது மற்றவர்களுக்கும் ஒரு பாடமாக அமையும் என்று கூறினார்.
இதே கூட்டத்தில் கலந்து கொண்ட மலேசிய இந்திய ஒருங்கிணைப்பு பேரவையின் தலைவர் ராஜரத்தினம் ஷரிபா இனியும் ஒளிந்திருக்காமல் துணிந்து வெளியே வந்து பவானியுடன் நேரடி விவாதத்தில் ஈடுபட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இந்தியர்கள் கிள்ளுக் கீரையல்ல அவர்களைச் சீண்டிப்பார்க்க வேண்டாம் என இதே கூட்டத்தில் கலந்து கொண்ட ரத்னவள்ளி அம்மையார் சாடினார்.
முகநூல் பக்கத்தில் ஒரு சாதாரண பதிவேற்றமாக தொடங்கிய பவானி-ஷரிபாவிற்கு இடையிலான கருத்தரங்கு விவாதம் இன்று கைமுளைத்து, கால்முளைத்து, ஒரு பூதாகாரமான விவகாரமாக வெடித்துக் கிளம்பி, பொதுத் தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் தேசிய முன்னணிக்கு எதிராக பிரம்மாண்டமாக உருவெடுத்து நிற்கின்றது.
இதனால் கணிசமான இந்திய வாக்குகள் தேசிய முன்னணிக்கு எதிராக திரும்பும் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகின்றது.