Home அரசியல் ஜசெகவின் இந்தியர் திட்டம் ஓட்டை என்றால் ம.இ.கா திட்டம் என்ன? – சரவணன் பதில் சொல்வாரா?

ஜசெகவின் இந்தியர் திட்டம் ஓட்டை என்றால் ம.இ.கா திட்டம் என்ன? – சரவணன் பதில் சொல்வாரா?

698
0
SHARE
Ad

Saravanan-Sliderகோலாலம்பூர், ஏப்ரல் 2 – ஜோகூர் மாநிலத்தில் கேலாங்பாத்தா தொகுதியில் போட்டியிடவிருக்கும் ஜசெக ஆலோசகர் லிம் கிட் சியாங் இந்திய சமுதாயத்திற்கென 14 அம்சத்திட்டத்தை அறிவித்து, மக்கள் கூட்டணி ஆட்சிக்கு வரும் பட்சத்தில் 100 நாட்களில் சொன்னவற்றை நிறைவேற்றுவோம் என்று அறிவித்திருந்தார்.

“கேலாங் பாத்தா பிரகடனம்” என இந்த திட்டம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

14 அம்சத்திட்டம் இந்திய சமுதாயத்தின் வளர்ச்சிக்கு வித்திடக்கூடிய நற்சிந்தனை- சரவணன் கருத்து

#TamilSchoolmychoice

ஜசெகவின் இந்த திட்டத்தை விமர்சனம் செய்யும் நோக்கில் கருத்து தெரிவித்த மஇகாவின் உதவித்தலைவரும், துணையமைச்சருமான சரவணன், இத்திட்டம் இந்திய சமுதாயத்தின் வளர்ச்சிக்கு வித்திடக்கூடிய நற்சிந்தனையாக இருந்தாலும், அதனை செயல்படுத்தும் ஆற்றல் ஜசெக வுக்கு இல்லையென்றும், இந்தியர்களின் வாக்குகளைப் பெறவே இந்த அறிவிப்பு என்றும் கூறியுள்ளார்.

இந்த திட்டத்தை ஓட்டை பாக்கெட் என்றும் சரவணன் வர்ணித்துள்ளார்.

எதிர்கட்சித்தலைவர்கள் மூலைக்கு மூலை வாக்குறுதிகளை அள்ளித் தெளித்து வருகிறார்கள் என்றும், கையில் ஏதும் இல்லாமல் அவர்களால் எப்படி சொன்னபடி நிறைவேற்றமுடியும் என்றும் சரவணன் மேலும் கூறியுள்ளார்.

மஇகா என்ன திட்டம் இந்தியர்களுக்கு வைத்திருக்கிறது என்று சரவணன் அறிவிக்கலாமே!

முன்பு மக்கள் கூட்டணியின் பொதுத் தேர்தல் கொள்கையறிக்கையைப் பற்றி ம.இ.காவினர் அதில் இந்தியர்களுக்கு ஒன்றுமே இல்லை என சாடினர்.

இப்போது ஜசெக இந்தியர்களுக்கென 14 அம்சத் திட்டம் ஒன்றை அறிவித்தாலும் அதனையும் ஓட்டை என ம.இ.காவின் உதவித் தலைவர் குறை சொல்லியுள்ளார்.

அப்படியானால், இந்திய சமுதாயத்திற்கு ம.இ.கா முன் வைக்கும் திட்டம் தான் என்ன?

மற்றவர்கள் கொண்டுவரும் திட்டத்தை எல்லாம் குப்பை என்றும் ஓட்டை என்றும் சொல்பவர்கள் ஜனநாயக அமைப்பில் தங்களின் மாற்றுத் திட்டத்தையும் முன்வைக்க வேண்டும் என்பதுதான் முதிர்ச்சி பெற்ற, ஜனநாயக பாணியிலான அரசியல் நடைமுறையாக இருக்க வேண்டும்.

அதை விடுத்து, சட்டி,அகப்பை என்று பழமொழிகளை அள்ளிவிடுவதை விடுத்து, ம இகா இந்திய சமுதாயத்திற்கென என்ன புதுத்திட்டம் வைத்திருக்கின்றது – பொதுத் தேர்தலுக்குப் பின்னர் தேசிய முன்னணியோடு இணைந்து அவர்கள் இந்திய சமுதாயத்திற்கு கொடுக்கப் போகும் திட்டம் என்ன – என்று சரவணன் அறிவிக்கலாமே!

மற்றவர்கள் கொண்டுவரும் திட்டங்களை மட்டும் சாடுவதும், குறை சொல்வதும்,  மட்டம் தட்டுவதும்தான் இதுவரை ம.இ.கா சார்பாக நிகழ்ந்திருக்கின்றதே தவிர, அவர்களின் உருப்படியான திட்டம் என்று இதுவரை எதுவும் இல்லை.

ஏன் ஹிண்ட்ராப் கூட தங்களுக்கென 5 ஆண்டு திட்ட வரைவினை முன்மொழிந்துள்ளது – அதற்காக அதன் தலைவர் வேதமூர்த்தி 21 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டமும் நடத்தினார்.

தேசியமுன்னணியில் பாதுகாப்பாக இருந்துகொண்டு எதிர்கட்சிகளை கிண்டல் செய்வதை மட்டுமே பொழுது போக்காகக் கொள்ளாமல் பொதுத் தேர்தலை முன்னிட்டு தங்களின் திட்டம் என்ன என்பதை ம.இ.கா சார்பில் அறிவிக்கலாமே!

ஜசெகவின் 14 அம்சத் திட்டம் முக்கிய அரசியல் நிகழ்வு

அண்மையக் காலத்தில் மலேசிய அரசியலில் ஜசெகவின் 14 அம்சத் திட்டம் மிக முக்கியமானதொரு நிகழ்வாக கருதப்படுகின்றது.

அடுத்து மக்கள் கூட்டணி ஆட்சி அமைத்தால் அதன் முக்கிய அங்கமாக இடம் பெறப் போகும், ஜசெக,  முன்வந்து இந்திய சமுதாயத்திற்கென 14 அம்சத் திட்டத்தை முன்மொழிந்துள்ளது

‘ஒய்யாரக் கொண்டையாம் தாழம்பூவாம், உள்ளே இருக்குதாம் ஈரும் பேணும்’ என்பது போல பணத்தால் மட்டும் தீர்க்க முடியாத – நம் தலைவர்கள் இன்னும் கவனம் செலுத்தவேண்டிய சமுதாயப் பிரச்சினைகள் நிறையவே  இருக்கின்றன.

500 ரிங்கிட் கொடுப்பதால் இந்தியர்களின் பிரச்சனைகள் தீர்ந்து போகும் என்ற மாயக் கனவிலும் நாம் எப்போதும் சஞ்சரித்துக் கொண்டிருக்க முடியாது.!

எனவே, ஜசெக போன்ற முக்கிய எதிர்கட்சிகள் – நாளை மத்திய அரசாங்கத்தைக் கைப்பற்றி ஆட்சி அமைக்கக் கூடிய சாத்தியமுள்ள கட்சிகள்- முன்வந்து, இந்தியர்களுக்கென திட்டங்களை முன்மொழிவதும் அதனை 100 நாட்களுக்குள் செய்து முடிப்போம் என சபதம் செய்வதும் மாறிவரும் ஓர் ஆரோக்கியமான அரசியல் முன்னேற்றமே ஆகும்.

எனவே, மக்கள் மன்றத்தில் ஜசெக வின் இந்த 14 அம்சத்திட்டம் பாராட்டையே பெறும்.

மாறாக, ம.இ.காவினர் விரும்பினால் அவர்களும் தங்களின் மாற்றுத் திட்டத்தை முன்வைக்கலாமே!

மக்கள் முடிவு செய்யட்டுமே! எது சிறந்த திட்டம் என்று!

அதை வைத்து யாருக்கு வாக்களிப்பது என்று!