Home அரசியல் மக்கள் பணத்தை சுருட்டி பாக்கெட்டுகளில் போட்டுக் கொள்வது எங்கள் பாணியல்ல- சரவணனுக்கு குலசேகரன் பதிலடி

மக்கள் பணத்தை சுருட்டி பாக்கெட்டுகளில் போட்டுக் கொள்வது எங்கள் பாணியல்ல- சரவணனுக்கு குலசேகரன் பதிலடி

614
0
SHARE
Ad

Kula-DAP-Featureகோலாலம்பூர், ஏப்.3-  இந்திய சமுதாயத்தின் நலனுக்காக ஜனநாயக செயல் கட்சி (ஜ.செ.க.)முன் மொழிந்துள்ள 14 அம்சத் திட்டத்தை ஓட்டை பாக்கெட் என்று வர்ணித்துள்ள கூட்டரசு பிரதேச நகர்புற நல்வாழ்வுத்துறை துணை அமைச்சர் டத்தோ எம்.சரவணின் அறிக்கைக்கு ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.குலசேகரன் பதிலடி கொடுத்துள்ளார்.

சரவணன் அறிக்கை பற்றி கருத்துரைக்கையில் “டத்தோ சரவணன் கூறுவது போல் எங்கள் பாக்கெட் ஓட்டைதான்; அதில் பணம் இல்லைதான். ஆனால் மக்கள் பணத்தை கொள்ளையிட்டு எங்கள் பாக்கெட்டுகளில் போட்டுக் கொள்வது எங்கள் பாணியல்ல” என்று குலசேகரன் கூறியுள்ளார்.

“நாங்கள் கடந்த 5 ஆண்டுகளில் பல சாதனைகளை செய்துள்ளோம். அதில் குறிப்பாக பினாங்கு மாநிலத்தில் ஒரு இந்தியரை துணை முதல்வராகவும், பேரா மாநில சட்டமன்ற சபாநாயகராக ஒரு இந்தியரையும், ஒரு தமிழ் பெண்னை சட்டமன்ற செயலாளராகவும் நியமித்திருக்கிறோம். அதே போல் வரும் 13ஆவது பொதுத்தேர்தலில் வெற்றி பெற்றால் மேலும் பல சாதனைகளை படைப்போம்” என்று எம்.குலசேகரன் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

“ஆனால் உங்கள் அதிகாரத்தின் கீழ் இருக்கும் புக்கிட் ஜாலில் தோட்டப் பிரச்சினையை தீர்க்கவே உங்களால் முடியவில்லை. இதற்கிடையில் ஒற்றுமை பொங்கல் என்ற நிகழ்ச்சியை 50 லட்சம் வெள்ளி செலவில் ஏற்பாடு செய்தீர்கள். இதனால் இந்திய மக்கள் அடைந்த நன்மைதான் என்ன?” என்றும்  குலசேகரன் கேள்வி எழுப்பினார்.

“இந்தியர்களின் பொருளாதாரத்தை முன்னேற்றுவதாகக் கூறி அவர்களின் பாக்கெட்டை ஓட்டை ஆகியது யார்? ம.இ.கா. ஹோல்டிங் மூலம் மக்கள் பாக்கெட்டை ஓட்டை ஆக்கியது யார் என்பதை அனைவரும் அறிவர்” என்றும் குலசேகரன் கூறியுள்ளார்.

கேலாங் பாத்தா தொகுதி தேர்தல் அறிக்கை என்று ஜ.செ.க. அறிவித்துள்ள 14 அம்சத் திட்டம் குறித்து மக்கள் மத்தியில் ஆதரவு பெருகி வருகின்றது என்பதோடு, சர்ச்சைகளும் எழும்பியுள்ளது.

இந்த 14 அம்சத் திட்டம் ஹிண்ட்ராப் 5 ஆண்டு திட்ட வரைவின் அப்பட்டமான காப்பி என்று ஹிண்ட்ராப் தேசிய ஆலோசகர் என்.கணேசன் கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.