கோலாலம்பூர்: குறைந்த சம்பளத்துடன் பட்டதாரிகளை தகுதியற்ற வேலைகளில் தள்ளுவது நீண்ட காலத்திற்கு பொருத்தமற்றது என்று ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.குலசேகரன் தெரிவித்தார்.
இந்த சூழல் எதிர்காலத்தில் வேலையின்மை மற்றும் உற்பத்தித்திறன் இழப்புக்கு வழிவகுக்கும் என்று அவர் கூறினார்.
“இளைஞர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்திற்கு சமமான ஊதியத்தை வழங்குவதன் மூலம், நாட்டில் உள்ள இளைஞர்களின் திறனை நாம் பயன்படுத்திக் கொள்ளாத சூழல் ஏற்படுகிறது. எனவே இந்த சிக்கலை தீர்க்க கொள்கைகளை வகுக்க வேண்டும். வேலையின்மை என்பது நீண்ட காலத்திற்கு பொருளாதாரத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கக்கூடும்,” என்று முன்னாள் மனிதவளத் துறை அமைச்சருமான அவர் கூறினார்.
பிரதமர் துறை (பொருளாதாரம்) அமைச்சர் முஸ்தபா முகமட் கூறிய கருத்துக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார். இக்காலக்கட்டத்தில், குறைந்த சம்பளத்துடன் வேலை கிடைத்தால் பட்டதாரிகள் அதனை ஏற்க வேண்டும் என்று அவர் நேற்று அமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.
2020- ஆம் ஆண்டில் பலவீனமான வேலை சந்தை காரணமாக, பொருளாதாரம் 5.6 விழுக்காடு குறைந்ததன் விளைவாக, இது ஏற்பட்டது என்றும் முஸ்தபா கூறினார்.
கொள்கை மட்டத்தில், இளைஞர்களின் வேலையின்மை பிரச்சனைக்கு தீர்வு காண நாடாளுமன்ற உறுப்பினர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், முதலாளிகள், தொழிற்சங்கங்கள் ஒரு குழுவை அமைக்குமாறு குலசேகரன் அரசாங்கத்தை வலியுறுத்தினார்.