கோலாலம்பூர்: மசீச, ஜசெக தொடர்பாக துன் மகாதீரின் கூற்றுக்கு அக்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
அக்கட்சிகள் இனத்திற்கான “தீவிர” தன்மைகளைக் கொண்டுள்ளன என்று அவர் கூறியது இந்த எதிர் கருத்துக்கு வித்திட்டுள்ளது.
மசீச தலைமைச் செயலாளர் சோங் சின் வூன் மற்றும் ஜசெக தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் ஆகியோர் தனித்தனியாக தங்கள் கட்சிகள் அதன் உறுப்பினர்களின் இனத்தைப் பொருட்படுத்தாமல் மிதமான பார்வையை எப்போதும் நிலைநிறுத்தியுள்ளன என்று கூறினர்.
மகாதீரைப் பொறுத்தவரை எல்லோரும் தீவிரமானவர்கள் “ஆனால் அவரைத் தவிர” என்று சோங் கூறினார்.
“மலேசியர்களே முடிவு செய்யட்டும்,” என்று அவர் மேலும் கூறினார்.
இதற்கிடையில், மகாதீரின் நிலைப்பாடு “தவறானது, ஆதாரமற்றது மற்றும் தவறாக வழிநடத்தப்பட்டது” என்று லிம் குவான் எங் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
“ஜசெக பல இனக் கட்சி என்பதை வரலாறு மற்றும் உண்மைகள் நிரூபிக்கும்போது மகாதீர் இவ்வாறு கூறுவது தவறு. கட்சி இனம் மற்றும் மதத்தைப் பொருட்படுத்தாமல் அனைத்து மலேசியர்களையும் பிரதிநிதித்துவப்படுத்த முற்படுகிறது. தன்னை முதலில் மலாய்க்காரர் என்று பார்க்கும் பிரதமர் மொகிதின் யாசின் போலல்லாமல், ஜசெக தன்னை முதலில் மலேசியராகவே பார்க்கிறது,” என்று அவர் வலியுறுத்தினார்.