Home கலை உலகம் “இந்தியர்களையோ தமிழர்களையோ குறிப்பிட்டுச் சொல்லவில்லை- மலேசியர்கள் என்றுதான் கூறினேன்” அறந்தாங்கி நிஷா கண்ணீர் பேட்டி!

“இந்தியர்களையோ தமிழர்களையோ குறிப்பிட்டுச் சொல்லவில்லை- மலேசியர்கள் என்றுதான் கூறினேன்” அறந்தாங்கி நிஷா கண்ணீர் பேட்டி!

1877
0
SHARE
Ad

கோலாலம்பூர் – “மலேசியாவில் சாராயம் காய்ச்சுபவர்கள் போல் இருக்கிறார்கள்” என சக நடிகர்களைப் பார்த்து தமிழகத்தின் ஸ்டார் விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கூறினார் என அறந்தாங்கி நிஷா மீது கண்டனக் குரல்கள் எழுந்துள்ள வேளையில் இதுகுறித்து, அவர் இணைய காணொளி ஊடகம் ஒன்றுக்கு கண்ணீர் பேட்டியொன்றை வழங்கியுள்ளார்.

“அரசியல் 360” என்ற யூடியூப் தளத்தின் இணைய ஊடகம், தனது பத்திரிக்கையாளர் சதீஷ் மூலமாக நடத்திய தொலைபேசி நேர்காணலில், தான் கூறிய சர்ச்சைக்குரிய வாசகங்கள் குறித்து நிஷா தன்னிலை விளக்கம் அளித்துள்ளார்.

“பொதுவாக நாங்கள் நகைச்சுவை வசனங்களைப் பேசும் போது, அமெரிக்கா, மலேசியா என ஒவ்வொரு நாட்டையும் பற்றி ஏதாவது கிண்டலாகக் கூறுவோம். இது நகைச்சுவைக்காகத்தானே தவிர யாரையும் புண்படுத்துவதற்காக அல்ல. நான் பேசிய வசனத்தில் பொதுவாக மலேசியா என்றுதான் கூறினேனே தவிர, மலேசிய இந்தியர்கள் என்றோ, தமிழர்கள் என்றோ நான் குறிப்பிட்டுக் கூறவில்லை. எனது தாயை நானே தரக் குறைவாகப் பேசுவேனா?” என கண்ணீர் மல்க அந்தப் பேட்டியில் தெரிவித்துள்ளார் நிஷா.

#TamilSchoolmychoice

மலேசியாவில் எனக்கு ஏராளமான இரசிகர்கள் இருக்கிறார்கள் என்றும், அவர்கள் கூட எனக்கு அனுப்பிய தகவல்களில் உங்களைப் பற்றி தவறாக எழுதியிருக்கிறார்கள் என்றுதான் கூறியிருக்கிறார்கள் எனத் தெரிவித்தார்.

தனது நிலைப்பாட்டை விளக்கி மக்கள் ஓசை நாளிதழுக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியிருப்பதாகவும் அந்தப் பேட்டியில் நிஷா கூறியிருக்கிறார்.

அந்தப் பேட்டியின் காணொளி வடிவத்தைக் கீழ்க்காணும் இணைப்பில் காணலாம்:

ஸ்டார் விஜய் நடத்திய “மிஸ்டர் அண்ட் மிசஸ் சின்னத்திரை” நிகழ்ச்சியில் சக நடிகர்களைப் பார்த்து ‘மலேசியாவுல கள்ளச் சாராயம் காய்ச்சுபவர்கள் போல இருக்கிறார்கள்” என்ற தொனியில் கிண்டலாகக் கூறினார் என நேற்று திங்கட்கிழமை மக்கள் ஓசை நாளிதழ் முதல் பக்கத் தலைப்புச் செய்தியை வெளியிட்டது.

அதைத் தொடர்ந்து பரவலாக அவர் மீதான கண்டனக் குரல்கள் அதிகரித்து வருகின்றன.

பேராக் மாநிலத் தமிழர் திருநாள் இயக்கத்தின் செயலாளர் இரத்தின மனோகரன் இதுபோன்று மலேசியர்களை இழிவுபடுத்தும் நிகழ்ச்சிகள் குறித்து கண்டனம் தெரிவித்ததாகவும் மக்கள் ஓசை செய்தி குறிப்பிட்டது.

நிஷாவின் நிகழ்ச்சிகளை அஸ்ட்ரோவில் தடை செய்க

தொடர்ந்து, பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் கல்வி, ஆராய்ச்சிப் பிரிவுத் தலைவர் என்.வி.சுப்பாராவ் வெளியிட்ட அறிக்கையில் இது குறித்து மலேசியாவில் உள்ள இந்தியத் தூதரகத்திற்கும், மலேசிய உள்துறை அமைச்சுக்கும், பினாங்கு பயனீட்டாளர் சங்கம் புகார்க் கடிதம் சமர்ப்பிக்கும்  என அறிவித்தார்.

மேலும் நிஷா தனது செயலுக்கு மலேசியர்களிடம் மன்னிப்பு கேட்கும்வரை அவரது நிகழ்ச்சிகளை அஸ்ட்ரோ தடை செய்ய வேண்டும் எனவும் பினாங்கு பயனீட்டாளர் சங்கம் கேட்டுக் கொண்டது.

மலேசியர்களைக் குறிப்பிட்டு இத்தகைய இழிவான வார்த்தைகளை நிஷா உதிர்த்த நிகழ்ச்சியை அஸ்ட்ரோவின் சம்பந்தப்பட்ட அதிகாரி முன்கூட்டியே தணிக்கை செய்திருக்க வேண்டும் என்றும் பினாங்கு பயனீட்டாளர் சங்கம் கூறியது.