Home கலை உலகம் அறந்தாங்கி நிஷா நிகழ்ச்சிகளை அஸ்ட்ரோவில் தடை செய்க!

அறந்தாங்கி நிஷா நிகழ்ச்சிகளை அஸ்ட்ரோவில் தடை செய்க!

5694
0
SHARE
Ad

கோலாலம்பூர் – தமிழகத் தொலைக்காட்சியான ஸ்டார் விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் மூலம் உலகம் எங்கும் இரசிகர்களைப் பெற்றிருப்பவர் அறந்தாங்கி நிஷா. தனது கறுப்பு நிறத்தைக் கிண்டலடித்துக் கொண்டே, நகைச்சுவைப் பேச்சாலும், நடிப்பாலும் கலக்கி வருபவர்.

மலேசியாவில் அஸ்ட்ரோ தொலைக்காட்சி சேவைகளின் வழியாக ஸ்டார் விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் ஒளிபரப்பாகி வருகின்றன.

தனது தோற்றமும், கறுப்பு நிறமும் எவ்வாறு தனக்கு அவமானத்தைத் தேடித் தந்தது என்பது குறித்தும் தான் எவ்வாறெல்லாம் புறக்கணிக்கப்பட்டேன் என்பது பற்றியும் அவர் பல பேட்டிகளில் உருக்கமாக விவரித்துள்ளார்.

#TamilSchoolmychoice

அண்மையில் சில திரைப்படங்களில் கூட நடித்தார். கோலமாவு கோகிலா படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

நகைச்சுவையில் கலக்கி வந்த நிஷா தற்போது மலேசியர்களிடையே சர்ச்சை ஒன்றில் சிக்கியுள்ளார். ஸ்டார் விஜய் நடத்திய “மிஸ்டர் அண்ட் மிசஸ் சின்னத்திரை” நிகழ்ச்சியில் சக நடிகர்களைப் பார்த்து ‘மலேசியாவுல கள்ளச் சாராயம் காய்ச்சுபவர்கள் போல இருக்கிறார்கள்” என்ற தொனியில் கிண்டலாகக் கூறினார் என நேற்று திங்கட்கிழமை மக்கள் ஓசை நாளிதழ் முதல் பக்கத் தலைப்புச் செய்தியை வெளியிட்டது.

அதைத் தொடர்ந்து பரவலாக அவர் மீதான கண்டனக் குரல்கள் அதிகரித்து வருகின்றன.

பேராக் மாநிலத் தமிழர் திருநாள் இயக்கத்தின் செயலாளர் இரத்தின மனோகரன் இதுபோன்று மலேசியர்களை இழிவுபடுத்தும் நிகழ்ச்சிகள் குறித்து கண்டனம் தெரிவித்ததாகவும் மக்கள் ஓசை செய்தி குறிப்பிட்டது.

நிஷாவின் நிகழ்ச்சிகளை அஸ்ட்ரோவில் தடை செய்க

தொடர்ந்து, பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் கல்வி, ஆராய்ச்சிப் பிரிவுத் தலைவர் என்.வி.சுப்பாராவ் வெளியிட்ட அறிக்கையில் இது குறித்து மலேசியாவில் உள்ள இந்தியத் தூதரகத்திற்கும், மலேசிய உள்துறை அமைச்சுக்கும், பினாங்கு பயனீட்டாளர் சங்கம் புகார்க் கடிதம் சமர்ப்பிக்கும்  என அறிவித்தார்.

மேலும் நிஷா தனது செயலுக்கு மலேசியர்களிடம் மன்னிப்பு கேட்கும்வரை அவரது நிகழ்ச்சிகளை அஸ்ட்ரோ தடை செய்ய வேண்டும் எனவும் பினாங்கு பயனீட்டாளர் சங்கம் கேட்டுக் கொண்டது.

மலேசியர்களைக் குறிப்பிட்டு இத்தகைய இழிவான வார்த்தைகளை நிஷா உதிர்த்த நிகழ்ச்சியை அஸ்ட்ரோவின் சம்பந்தப்பட்ட அதிகாரி முன்கூட்டியே தணிக்கை செய்திருக்க வேண்டும் என்றும் பினாங்கு பயனீட்டாளர் சங்கம் கூறியது.

அடுத்து: மலேசியர்களை இழிவாகப் பேசியது குறித்து அறந்தாங்கி நிஷா தரும் பதில் என்ன? (காணொளிப் பதிவுடன்)