ஈப்போ, ஏப்ரல் 4- பேரா மாநில சட்டமன்றம் நேற்று கலைக்கப்பட்டது. இத்தகவலை பேரா மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ டாக்டர் ஜம்ரி அப்துல் காதர் நேற்று தமது அதிகாரப்பூர்வ இல்லத்தில் அறிவித்தார்.
சட்டமன்றத்தைக் கலைப்பதற்கு பேரா இளவரசர் ராஜா நஸ்ரின் ஷா ஒப்புதல் வழங்கி விட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
நேற்று மாலை 5.20 மணி அளவில் ஜாலான் தம்பூனில் உள்ள மந்திரி புசாரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் 50க்கும் மேற்பட்ட செய்தியாளர்கள் முன் மாநிலம் சட்டமன்றம் கலைப்பு பற்றி டத்தோஸ்ரீ ஜம்ரி அப்துல் காதர் அறிவித்தார்.
தாம் மந்திரி புசாராக பதவியேற்ற கடந்த நான்கு ஆண்டு காலத்தில் பேரா மாநில மேம்பாட்டுக்கும், சுபிட்சத்திற்கும் தாமும் தமது தேசிய முன்னணி சகாக்களும் தங்களது பங்களிப்பை வழங்கியுள்ளதாகவும் அவர் கூறினார். எங்களுடைய சேவையை கருத்தில் கொண்டு இந்த மாநிலத்தில் தேசிய முன்னணி மீண்டும் பெரும்பான்மையில் வெற்றிப்பெற மக்கள் வாக்களிப்பார்கள் என்று மந்திரி புசார் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்த அறிவிப்பின் போது மாநில சபாநாயக்கர் டத்தோ ஆர்.கணேசன், மந்திரி புசாரின் ஆலோசகர் டத்தோ வீரசிங்கம் மேலும் சட்டமன்ற உறுப்பினர்களும் இருந்தனர்.