புதுடில்லி – தற்போது சிபிஐ எனப்படும் மத்திய புலனாய்வுத் துறையின் தடுப்புக் காவலில் இருந்து வரும் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை தொடர்ந்து செப்டம்பர் 2-ஆம் தேதி வரை தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதித்துள்ளது.
முறையான ஒத்துழைப்பை சிதம்பரம் வழங்கவில்லை எனக் காரணம் காட்டி, அவருக்கு முதலில் வழங்கப்பட்டிருந்த 5 நாட்கள் தடுப்புக் காவலை நீட்டிக்க சிபிஐ கோரிக்கை விடுத்தது. அதற்கேற்ப ஆகஸ்ட் 30 வரை அவரைத் தடுப்புக் காவலில் வைத்திருக்க அனுமதி வழங்கிய நீதிமன்றம் பின்னர் அதனை செப்டம்பர் 2 வரை நீட்டித்துள்ளது. வழக்கில் சம்பந்தப்பட்ட மேலும் சிலரை சிதம்பரத்தைச் சந்திக்க வைத்து விசாரிக்க வேண்டும் என மத்திய புலனாய்வுத் துறை தடுப்புக் காவல் நீட்டிப்புக்கு அனுமதி கேட்டதன் அடிப்படையில் நீதிமன்றம் கூடுதல் நீட்டிப்பை வழங்கியிருக்கிறது.
காவல் நீட்டிப்பைத் தொடர்ந்து சிதம்பரம், விடுதலையாகும்போது மொத்தம் 11 நாட்கள் தடுப்புக் காவல் வாசத்தை அனுபவித்திருப்பார்.
இந்திய உச்ச நீதிமன்றமும் சிதம்பரத்தின் கைது விவகாரத்தில் அவருக்குச் சாதகமான தீர்ப்பை வழங்கவில்லை.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு விதிகளை மீறி 3,050 மில்லியன் ரூபாய் முதலீடு கொண்டு வந்தது தொடர்பில் மத்தியப் புலனாய்வுத் துறை இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளது.