புதுடில்லி – 105 நாட்களாக தடுப்புக் காவல் – திகார் சிறை வாசம் – என மாறி மாறி சிறைவாசம் அனுபவித்து வந்த இந்தியாவின் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்திற்கு, ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில், உச்ச நீதிமன்றம் நிபந்தனைகளுடன் கூடிய பிணையை (ஜாமீன்) இன்று புதன்கிழமை காலை வழங்கியது.
அவருக்கு 2 இலட்சம் ரூபாயை பிணைத் தொகையாக உச்ச நீதிமன்றம் நிர்ணயித்தது.
பிணையில் இருக்கும் காலத்தில் சிதம்பரம் வழக்கு தொடர்பான சாட்சிகளுடன் உரையாடவோ, தொடர்பு கொள்ளவோ கூடாது, வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டியிருந்தால் நீதிமன்றத்தின் முன் அனுமதியுடன்தான் செல்லவேண்டும், பத்திரிகையாளர்களுடன் பொது சந்திப்பு நடத்தக் கூடாது என்பது போன்ற நிபந்தனைகளை சிதம்பரத்திற்கு உச்ச நீதிமன்றம் விதித்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து இன்றே சிதம்பரம் திகார் சிறையிலிருந்து விடுதலையாவார் என எதிர்பார்க்கப்படுகிறது.