டெஹ்ரான்: அனைத்துலக விளையாட்டுப் போட்டிகளில் தங்களின் விளையாட்டு வீரர்களை கலந்துக் கொள்வதில் தலையிட்டு வரும் ஈரான் அரசை எதிர்த்து அந்நாட்டு மக்கள், தங்கள் நாட்டின் விளையாட்டு அமைப்புகளை அனைத்துலக அளவிலான போட்டிகளில் பங்கேற்பதில் இருந்து தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
#BanIRSportsFederations என்ற ஹேஷ்டேக் பல்லாயிரம் இரான் டுவிட்டர் பயனர்களால் பகிரப்பட்டு வருகிறது.
கடந்த 2018-ஆம் ஆண்டு நடந்த ஒரு காற்பந்து போட்டியில், ஆண் வேடமிட்டு மைதானத்துக்குள் சென்ற 29 வயது பெண் ஒருவரின் சிறைக் காவலை நீதிமன்றம் நீட்டித்தது. அதனை எதிர்த்து அப்பெண் தலைநகர் டெஹ்ரானில் உள்ள அந்நீதிமன்றத்தின் முன் தனக்குத் தானே தீயிட்டுக்கொண்டார்.
மேலும், அனைத்துலக அளவிலான போட்டிகளில் இஸ்ரேல் வீரர்களுடன் இரான் வீரர்கள் மோதுவதை இரான் தடுத்து வருகிறது. தங்கள் அரசின் இத்தகைய நடவடிக்கைகளால் அனைத்துலக விளையாட்டு அமைப்புகள் தங்கள் நாட்டின் விளையாட்டு அமைப்புகளை தடை செய்ய வேண்டும் என்று அந்நாட்டு மக்கள் கோருகின்றனர்.