Home உலகம் ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் இஸ்ரேலியப் படைகளால் கொல்லப்பட்டார்

ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் இஸ்ரேலியப் படைகளால் கொல்லப்பட்டார்

293
0
SHARE
Ad
யாஹ்யா சின்வார்

டெல் அவிவ் :  தற்போதைய காசா போர் தொடங்கிய அக்டோபர் 7, 2023 கொடூரத் தாக்குதலின் முக்கிய காரணி என இஸ்ரேல் கருதும் ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வார், இஸ்ரேல் படைகளால் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனர்.

சின்வாரின் மரணத்திற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு பாராட்டு தெரிவித்தார். இஸ்ரேலிய தலைவர் நெதன்யாகு தனது அறிக்கையில், இது “ஹமாசுக்குப் பின்னடைவுக்கானத் தொடக்கம்” என்று குறிப்பிட்டதோடு, காசாவில் இன்னும் சிறைபிடிக்கப்பட்டுள்ள பிணைக்கைதிகளை விடுவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

காசாவின் மீது பறந்த இஸ்ரேலிய ஆளில்லா விமானம், புதன்கிழமை இஸ்ரேலிய டாங்கியால் தாக்கப்பட்ட கட்டிடத்தின் இடிபாடுகளில் சின்வாரின் உடலைக் கண்டறிந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

#TamilSchoolmychoice

இஸ்ரேலிய அதிகாரிகள் மரபணு மாதிரி (DNA) பரிசோதனைகள் மற்றும் பல் பதிவுகளைப் பயன்படுத்தி அவரது அடையாளத்தை உறுதிப்படுத்தினர்.

இதற்கிடையில் ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் போர் நடவடிக்கைகளைத் தொடக்கியிருக்கிறது.

ஈரான் ஆதரவு ஹவுத்தி குழுவினருக்கு எதிராக கடந்த புதன்கிழமை (அக்டோபர் 16) மாலை அமெரிக்கா தாக்குதல்களை நடத்தியதாக பாதுகாப்புச் செயலாளர் லாயிட் ஆஸ்டின் தெரிவித்தார். பி-2 (B-2) ஸ்டெல்த் போர் விமானங்களைப் பயன்படுத்தி ஐந்து நிலத்தடி ஆயுத சேமிப்புக் கிடங்குகளை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்பட்டது.

செங்கடல் மற்றும் ஏடன் வளைகுடாவில் இராணுவ மற்றும் பொதுப் போக்குவரத்துக் கப்பல்கள் மீது இலக்கு வைத்துத் தாக்குதல் நடத்த  பயன்படுத்தப்படுவதற்காக நவீன, பாரம்பரிய ஆயுதங்கள் இந்த வசதிகளில் சேமிக்கப்பட்டிருந்ததாக தாக்குதலுக்குப் பிறகு மூன்று அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் ஊடகங்களுக்குத் தெரிவித்தனர்.

“நிலத்தடியில் எவ்வளவு ஆழமாக புதைக்கப்பட்டிருந்தாலும், பலப்படுத்தப்பட்டிருந்தாலும் அல்லது பாதுகாக்கப்பட்டிருந்தாலும், எங்கள் எதிரிகள் அணுக முடியாத வசதிகளை இலக்கு வைக்கும் அமெரிக்காவின் திறனின் தனித்துவமான வெளிப்பாடு இது” என்று ஆஸ்டின் ஓர் அறிக்கையில் கூறினார்.

ஹவுத்திகளுக்கு எதிராக ஏமனில் ஸ்டெல்த் குண்டு வீச்சு விமானங்களை அமெரிக்கா பயன்படுத்தியது இதுவே முதல் முறையாகும். பி-2 விமானங்கள் மற்ற விமானங்களைவிட அதிக எடை கொண்ட குண்டுகளை சுமக்கும் திறன் கொண்டவையாகும்.