கோலாலம்பூர் : இன்று வெள்ளிக்கிழமை (அக்டோபர் 18) தனது மதானி அரசாங்கத்தின் 3-வது வரவு செலவுத் திட்டத்தை (பட்ஜெட்) நாடாளுமன்றத்தில் அறிவிக்கிறார் நிதியமைச்சரும் பிரதமருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம்.
வழக்கம்போல் இந்திய சமூகத்திற்கு அந்தத் திட்டத்தில் என்ன அறிவிப்புகள் வெளியிடப்படவிருக்கின்றன என்ற எதிர்பார்ப்பு இந்திய சமூகத்தில் ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக தமிழ் ஊடகங்களும் இதனையே தங்களின் செய்திகளில் பிரதிபலித்து வருகின்றன.
வழக்கம்போல் மித்ராவுக்கு 100 மில்லியன் ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தொகையை 300 மில்லியனாக உயர்த்தித் தரும்படி பிரதமரிடம் கோரிக்கை வழங்கப்பட்டிருப்பதாக மித்ராவின் தலைவரும் பத்து நாடாளுமன்ற உறுப்பினருமான பி.பிரபாகரன் தெரிவித்திருந்தார்.
இந்தியத் தொழில் முனைவோருக்கான கடனுதவித் திட்டங்கள் அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் வேளையில், தமிழ்ப் பள்ளிகளுக்கான சிறப்பு நிதி ஒதுக்கீடுகள் வழங்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளத.
நஜிப் பிரதமராக இருந்த காலத்தில் தமிழ்ப்பள்ளிகளுக்கு 50 மில்லியன் ரிங்கிட் சிறப்பு நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டது. எனினும் கடந்த வரவு செலவுத் திட்டங்களில் தமிழ்ப் பள்ளிகளுக்கு என தனியான ஒதுக்கீடு இல்லை என்றும் எல்லாப் பள்ளிகளையும் அரசாங்கம் சரசமமாக நடத்தி நிதி ஒதுக்கீடுகள் வழங்கும் என்றும் அன்வார் அறிவித்திருந்தார்.
இதற்கிடையில் இன்றைய வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்யும் இறுதிகட்டப் பணிகளைப் பார்வையிட அன்வார் நேற்று (அக்டோபர் 17) நிதியமைச்சுக்கு வருகை தந்தார். அங்கு நிதியமைச்சின் அதிகாரிகளைப் பாராட்டியதோடு, அவர்களுடன் புகைப்படங்களும் எடுத்துக் கொண்டார்.