கோலாலம்பூர்: மலாயா பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழாவின் போது துணைவேந்தருக்கு எதிரான எதிர்ப்பு நடந்து ஓயாத நிலையில், நேற்று வியாழக்கிழமை நள்ளிரவில், மலாயா பல்கலைக்கழகத்தின் அகப்பக்கம் ஊடுருவப்பட்டதாக அஸ்ட்ரோ அவானி செய்தி வெளியிட்டிருந்தது.
இருப்பினும், பல மணிநேரங்களுக்குப் பிறகு, அந்த இணைப்பு ஊடுருவப்பட்ட பக்கத்தைக் காட்டவில்லை என்பதை அவானி கண்டறிந்ததாகத் தெரிவித்தது.
இந்த ஊடுருவல் சம்பவம் சமீபத்திய போராட்டக்காரர்களுடன் தொடர்பு இருப்பதாக நம்பப்படுகிறது.
மாணவர் வோங் யான் கே கடந்த செவ்வாய்க்கிழமை மலாயா பல்கலைக்கழகத்தின் 59-வது பட்டமளிப்பு விழாவின் போது துணைவேந்தருக்கு எதிராக ஓர் அட்டையை ஏந்தி எதிர்ப்புத் தெரிவித்தார்.
இருப்பினும், தாம் இந்த அகப்பக்க ஊடுருவல் விவகாரத்தில் ஈடுப்படவில்லை என்று யோங் மறுத்தார்.
“கணினி அறிவியல் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. என் சார்பாக இதைச் செய்ய நான் யாரையும் வழிநடத்தவில்லை” என்று அவர் இன்று வெள்ளிக்கிழமை பிரி மலேசியா டுடே செய்தித்தளத்தில் தெரிவித்திருந்தார்.