Home One Line P1 சிறந்த பட்டதாரிகளே மலாயா பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறையின் சான்று

சிறந்த பட்டதாரிகளே மலாயா பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறையின் சான்று

722
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மலேசியாவில் தமிழ்மொழி, இலக்கியம் மற்றும் தமிழர்களின் பண்பாட்டு வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்ட மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறை, கால மாற்றத்திற்கு ஏற்ப சிறப்பான வளர்ச்சியைப் பதிவு செய்து வருகிறது.

தற்போது, இத்துறையைச் சேர்ந்த பட்டதாரிகள், தங்கள் திறமைகேற்ப பல்வேறு துறைகளில் பணி புரிந்து வருவதே அதற்கு தக்கச் சான்று என்கிறார் இந்திய ஆய்வியல் துறையின் முன்னாள் தலைவர் முனைவர் மோகனதாஸ் இராமசாமி.

அமரர் தமிழவேள் கோ.சாரங்கபாணி அவர்களின் முயற்சியின் பயனாக, மலாயாப் பல்கலைக்கழக கலைப் புலத்தில் ஓர் அங்கமாக 1956-ஆம் ஆண்டில் இந்திய ஆய்வியல் துறை தோற்றம் கண்டது.

#TamilSchoolmychoice

தமிழ் மொழி, இலக்கியம், தமிழர்களின் பண்பாட்டு வளர்ச்சிக்கு அரணாக விளங்கும் இத்துறை, மொழி அறிஞர்கள், இலக்கிய ஆய்வாளர்கள், எழுத்தாளர்கள், கல்வியாளர்கள், ஊடகவியலாளர்கள் உட்பட ஆக்கப்பூர்வமான தலைவர்களையும், சிந்தனையாளர்களையும் உருவாக்கியுள்ளது.

கடந்த காலங்களில் இத்துறையில் பயின்ற 90 விழுக்காட்டினர் கல்வி துறையில் தங்கள் பணியை மேற்கொண்டனர். அவ்வகையில், சமூக அந்தஸ்துடைய வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி தரும் உத்தரவாதத்தையும் இத்துறை கொண்டிருந்தது.

ஆயினும், 2000-ஆம் ஆண்டுக்குப் பிறகு கல்வி துறையில் ஏற்பட்ட மாற்றத்தினால், இத்துறையில் மேற்கல்வியைத் தொடர்ந்த மாணவர்கள் ஆசிரியர் தொழிலில் ஈடுபட முடியாமல் போனது வேதனைக்குரியது என்று முனைவர் மோகனதாஸ் இராமசாமி குறிப்பிட்டார்.

”இத்துறையின் தனித்துவம் என்பது ஆரம்பப்பள்ளியில் தமிழ்க்கல்வியைத் தொடங்கும் மாணவர்கள், மலாயாப் பல்கைக்கழகம் வரையில் தமிழ் மொழியில் கல்வியை மேற்கொள்ள முடியும். இந்த அழகிய சூழலைத் தொடர்ந்து நிலை நிறுத்துவது நமது கடப்பாடாகும்.”

“செம்மொழியான தமிழ்மொழி, தொன்மையான இலக்கணம், விலைமதிப்பற்ற இலக்கியம், கலை, கலாச்சாரம், பண்பாடு போன்றவற்றைத் தொடர்ந்து போற்றிப் பாதுகாப்பதோடு, அடுத்த தலைமுறைக்கும் கொண்டு சேர்க்க வேண்டிய மிகப்பெரிய கடப்பாட்டை இந்திய ஆய்வியல் துறை கொண்டுள்ளது,” என்றார் அவர்.

நாட்டின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்பவும் இத்துறையில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது.

குறிப்பாக, 2014-ஆம் ஆண்டில் தாம் தலைவராகப் பொறுப்பேற்ற பின்பு, பணியிட தேவைகளுக்கு ஏற்ப பாடத் திட்டங்களில் மாற்றங்களைக் கொண்டு வந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

”மாற்றங்களை நாம் வரவேற்கின்றோம், ஆனால், இத்துறையின் அடைப்படை நோக்கத்திற்காகத் தோற்றிவிக்கப்பட்ட பாடதிட்டங்களை அவை பாதிக்கக்கூடாது. அவ்வகையில், முதலாவதாக மொழியும் இலக்கணமும் உள்ளது. இரண்டாவது நிலையில் இலக்கியம் உள்ளது. சங்க இலக்கியம், இடைக்கால இலக்கியம், பிறகு நவீன இலக்கியம் என தமிழ் இலக்கிய வளர்ச்சியை மாணவர்களுக்குப் போதிப்பதாகும். அடுத்ததாக, சமூக, பண்பாடு மற்றும் ஊடகவியல் தொடர்பான பாடமாகும்,” என்றார் அவர்.

மேலும், தமிழ் படிக்க தெரியாத இந்திய மாணவர்களுக்கும், மற்ற இன மாணவர்களுக்கும் நமது மொழியின் சிறப்பையும் பண்பாட்டின் மேன்மையையும் போதிக்கும் கடப்பாட்டையும் இந்திய ஆய்வியல் துறை கொண்டுள்ளதாகவும் முனைவர் மோகனதாஸ் தெரிவித்தார்.

இத்தகைய மாற்றங்களுக்கு இந்திய ஆய்வியல் துறையின் சக விரிவுரையாளர்களின் பங்கும் ஒத்துழைப்பும் பாராட்டுக்குரியது என்றும் அவர் விவரித்தார்.

”கலை புலத்தின் ஒவ்வொரு துறைக்கும் முறைபடுத்தப்பட்ட பாடத்திட்டங்கள் உள்ளன. உதாரணமாக, ஊடகவியல் துறை ஊடகத்தை அடிப்படையாகக் கொண்டே செயல்படுகின்றது. ஆகவே, தமிழ்மொழியில் இந்த ஊடகத்துறை தொடர்பான பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்தும்போதும், இந்திய ஆய்வியல் துறைக்கு அது பெரும் சவாலாக அமைந்தது, ” என்று அவர் விளக்கினார்.

மேலும், தொழிற்துறையின் வளர்ச்சிக்கு ஏற்ப இத்துறையில் பாடங்களை அவ்வப்போது மாற்றி அமைப்பது எளிதான காரியம் அல்ல என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

“தொழில் துறை நாளுக்கு நாள் வளர்ந்துக்கொண்டே போகிறது. அதற்கு ஏற்ப பாடதிட்டங்களை வரையறுப்பது சாத்தியமில்லை. ஏனெனில், நமது துறை ஆய்வியல் துறை. மேலும், குறிப்பிட்ட ஒரு தொழிலுக்கென்று பாட திட்டத்தை உருவாக்க முடியாது. மாற்றங்களை நாம் வரவேற்கிறோம், ஆனால் அம்மாற்றங்கள் துறை சார்ந்ததாக இருப்பது சிறப்பு,” என்றும் அவர் கூறினார்.

எனினும், பணியிடத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், இந்திய ஆய்வியல் துறை அடிப்படை பாடத்திட்டங்களோடு, புதிய பாடங்களையும் இணைத்து கொள்ள தயராகவுள்ளதாக,” பெர்னாமாவிடம் முனைவர் மோகனதாஸ் தெரிவித்தார்.

-பெர்னாமா