பெட்டாலிங் ஜெயா – மலாயாப் பல்கலைக் கழகத்தின் இந்திய ஆய்வியல் துறையின் முன்னாள் தலைவரும் நிறைநிலைப் பேராசிரியருமான (Professor Emeritus) முனைவர் சிங்காரவேலு நேற்று செவ்வாய்க்கிழமை (ஜனவரி 14) காலமானார். அன்னாரின் இறுதிச் சடங்குகள் இன்று புதன்கிழமை பெட்டாலிங் ஜெயாவிலுள்ள அவரது இல்லத்தில் நடந்தேறின.
மலாயாப் பல்கலைக் கழகத்தின் தமிழ்ப் பேரவையின் முதல் தலைவராகவும் தோற்றுநராகவும் திகழ்ந்த சிங்காரவேலு திருக்குறளை மலாய் மொழியில் மொழிமாற்றம் செய்த பெருமைக்குரியவராவார்.
இந்து மதம், இந்திய சமூகம், தமிழ்மொழி என பலமொழிகளிலும் ஆய்வுகளை முன்னெடுத்த தமிழறிஞரான அவரிடம், ஏராளமான பல்கலைக் கழக மாணவர்கள் கல்வி கற்றனர்.
மலேசிய இந்திய சமூகத்திற்கு கல்வி ரீதியாகவும், ஆய்வுகள் ரீதியாகவும் அளப்பரிய பணிகள் ஆற்றிய அவரது மறைவு பேரிழப்பாகும்.