Home One Line P1 இந்திய ஆய்வியல் துறை பாடத்திட்டம் எதிர்காலத்திற்கு ஏற்ப இருக்க வேண்டுமா?

இந்திய ஆய்வியல் துறை பாடத்திட்டம் எதிர்காலத்திற்கு ஏற்ப இருக்க வேண்டுமா?

787
0
SHARE
Ad

கோலாலம்பூர் — (பெர்னாமா) – மலேசிய இந்தியர்களின் தனிப்பெரும் சொத்தாக, மலாயா பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறை விளங்குகிறது.

கடந்த 60 ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வரும் இத்துறை, தமிழ் மொழி வளர்ச்சிக்கும், மலேசிய இந்திய சமூக மேம்பாட்டிற்கும் ஆற்றிவரும் பங்களிப்பை யாரும் மறுக்க இயலாது.

இத்துறையின் முன்னாள் மாணவர்கள், நாட்டில் பல்வேறு துறைகளில் முத்திரை பதித்து வந்துள்ளனர். எதிர்கால தொழில் தேவைக்கு ஏற்ப, இத்துறையின் பாடத் திட்டங்களில் புதிய மாற்றங்கள் தேவை என்று தற்போது குரல்கள் எழுகின்றன.

#TamilSchoolmychoice

அது குறித்து பெர்னாமா செய்தி சிறப்புக் கண்ணோட்டத்தை மேற்கொண்டது.

மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறை பாடத்திட்டம் எதிர்கால பணியிட தேவைகளுக்கு ஏற்ப இருத்தல் வேண்டுமா? என பெர்னாமா செய்திகள் கருத்துக் கணிப்பை மேற்கொண்டது. இதற்கு, 100 விழுக்காட்டினர் தேவை என்று பதிலளித்துள்ளனர்.

குறிப்பாக, 4.0 தொழில் புரட்சிக்கு ஏற்ப இத்துறையின் பாடத்திட்டம் அமைவது சிறப்பு என்று பலரும் கருத்துரைத்திருந்தனர்.

அவ்வாறான மாற்றங்கள் இத்துறையின் தோற்றத்திற்கு புதிய பொலிவை ஏற்படுத்துவதோடு, மாணவர்களின் முதன்மைத் தேர்வாகவும் இத்துறை இருக்கும் என்றும் இணையவாசிகள் குறிப்பிட்டுள்ளனர்.

கிருஷ்ணன் மணியம்

இக்கருத்தை வரவேற்கும் வகையில் காலத்திற்கு ஏற்ற மாற்றங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அண்மையில் இந்திய ஆய்வியல் துறையின் தலைவராக இருந்து பணி ஓய்வு பெற்ற இணைப் பேராசிரியர் முனைவர் கிருஷ்ணன் மணியம் தெரிவித்தார்.

”நமது பாடத்திட்டங்களில் பல மாற்றங்கள் செய்தோம். அதன் அடிப்படையில் ஊடகங்கள் மற்றும் பத்திரிகை தொடர்பான விவகாரங்கள் பேசப்பட்டன. அதன் அடிப்படையில் இவர்கள் தற்போது பல துறைகளில் ஈடுபட்டு வருகின்றனர்” என்றார் அவர்.

”இத்துறையில் மேற்கல்வியை தொடர்ந்த மாணவர்கள் தற்போது பல்வேறு துறைகளில் சாதனை புரிந்து வருவது இத்துறைக்கு கிடைத்த பெருமை,” என்றும் அவர் கூறினார்.

இத்துறையில் தற்போது ஏற்படும் பாடத்திட்ட மாற்றங்கள் மாணவர்களின் வேலை வாய்ப்புகளை அதிகரித்து வருவதாகவும் முனைவர் கிருஷ்ணன் குறிப்பிட்டார்.

இதனிடையே, இத்துறையில் பயின்ற முன்னாள் மாணவர்கள் சிலரின் கருத்துகளையும் பெர்னாமா கேட்டறிந்தது.

”இந்திய ஆய்வியல் துறையின் பெயருக்கு ஏற்ப மாணவர்கள், இந்தியர்களின் வாழ்வு முறைகள் குறித்த ஆய்வுகளை செய்ய வேண்டும் அதற்கு அத்துறை ஊக்குவித்து துணை நிற்க வேண்டும்”, என்று 2005/2006 ஆம் ஆண்டிற்கான தமிழ் பேரவையின் முன்னாள் தலைவர் சிவா ராஜேந்திரன் கூறினார்.

”இந்திய ஆய்வியல் துறை பாடத்திட்டம் எதிர்கால பணியிட தேவைகளுக்கு ஏற்ப இருப்பது அவசியமாகிறது. காரணம் இன்றைய மாணவர்கள், பின்நாளில் வேலை இடங்களில் பல சவால்களை எதிர்கொள்கின்றனர். ஆதலால், பாடத் திட்டத்தில் ஏற்படும் மாற்றங்கள் அவர்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல ஒரு வழிகாட்டியாக இருக்கும்”, என்று 2016 /2017 ஆம் ஆண்டின் தமிழ் பேரவையின் முன்னாள் தலைவர் சரத்குமார் கனசேகரன் தெரிவித்தார்.

”அறக்கட்டளையின் மூலம் கிடைக்கின்ற நிதியை மாணவர்களின் இலக்கியப் படைப்புகளுக்கு சமூகம் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கும் அதிகம் பயன்படுத்தப்பட வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம், எழுத்து துறையில் மாணவர்களின் பங்களிப்பு அதிகரிக்கக்கூடும்”, என்று முன்னாள் மாணவர் பத்மா ஜமினி தெரிவித்தார்.

மொழி- சமூக வளர்ச்சிக்கு இத்துறை தொடர்ந்து அளப்பரிய பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பு அப்பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்களுக்கு மட்டுமின்றி, மலேசிய வாழ் அனைத்து இந்தியர்களுக்கும் மேலோங்கி இருக்கிறது.

–பெர்னாமா