Home Photo News வேல்ஸ் கார்டிப் மெட்ரோபாலிட்டன் பல்கலைக் கழகத்தின் தமிழ் மொழி மெய்நிகர் மாநாடு

வேல்ஸ் கார்டிப் மெட்ரோபாலிட்டன் பல்கலைக் கழகத்தின் தமிழ் மொழி மெய்நிகர் மாநாடு

223
0
SHARE
Ad

பிரிட்டனில் உள்ள வேல்ஸ் கார்டிப் மெட்ரோபோலிட்டன் பல்கலைக் கழகத்தின் விரிவுரையாளர் முனைவர் இராஜ் இராமச்சந்திரன் பகிர்ந்து கொள்ளும் தகவல்.

  • உலக மாநாட்டில் ஆங்கிலத்துடன் தமிழிலும் சமர்ப்பிக்க புது முயற்சி

தாய்மொழி வழி கல்வியில் பாடங்களை கற்றுகொள்ளும் போது எளிதில் புரிந்துகொள்ள முடியும். ஆனால் அதே நேரத்தில் உலகத்தில் மற்ற நாடுகளுடன் போட்டியிட்டு வெற்றி பெற பிற மொழிகளின் அறிவும் திறனும் தேவைப்படுகிறது.

அதிலும் குறிப்பாக ஆங்கில மொழித் திறன். ஆனால் தமிழ் வழியில் பயின்றால் வாய்ப்புகள் குறைவு என்ற கருத்துகளும் எழுகின்றன. அதே நேரத்தில் ஆங்கில வழியில் முழுமையாக பயின்றால் பொருளாதாரத்தை மேம்படுத்தலாம் என்கின்ற வாதத்தை பலரும் முன்வைக்கின்றனர். எனவே ஆங்கிலம்தான் தெரியுமே பிறகு எதற்கு தமிழ் என்ற யதார்த்தமான கேள்வியைப் பலரும் முன் வைப்பது உண்டு. இதில் ஆச்சரியம் என்னவென்றால் இது போன்ற கருத்துகள் தமிழர் அல்லாதோரிடம் இருந்து வருவதில்லை. மாறாக தமிழ்ச் சமூகத்தில் இருந்தே வருகின்றது. இது மிகவும் வேதனைக்குரிய ஒரு விடயம்.

உலகளவில் 8 கோடி மக்கள் தொகையைக் கொண்டுள்ள தமிழ்மொழி, பல நாடுகளில் சிறுபான்மை மொழியாகவே திகழ்ந்து வருகின்றது, எனவே தமிழர்கள் அப்பகுதியில் உள்ள ஆட்சிமொழி அல்லது பெரும்பான்மையில் பேசப்பட்டு வரும் மொழியில் புலமை பெற கடமைப்பட்டுள்ளார்கள்.

#TamilSchoolmychoice

அது மட்டுமல்லாமல் அது காலத்தின் கட்டாயமும் கூட ஆகிவிடுகிறது. ஆனால் தமிழ்மொழியில் புலமை பெறாததற்கு இதையெல்லாம் காரணமாகக் காட்டிவிட முடியாது. தமிழைத் தாய் மொழியாகக் கொண்டுள்ள மக்கள் உலகத்தில் எங்கு இருந்தாலும் அவர்களின் தாய்மொழியில் எழுத, படிக்க, பேசத் தெரிந்திருக்க வேண்டும். ஆனால் தமிழில் படிப்பறிவு பெறுவதற்கே இன்று காரணங்களை விளக்கிச் சொல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றோம். தமிழ்மொழி அல்லது வேறு எந்த மொழியாக இருந்தாலும் சரி, அவரவர் தாய்மொழியில் படிப்பறிவு பெற காரணங்களே தேவை இல்லை என்பது கருத்து.

வேகமாக வளர்ச்சியடையும் தொழில்நுட்ப உலகத்தில் தமிழ்மொழிக்கு ஒரு முக்கிய பங்கு உண்டு. ஆனால் தொழில்நுட்பத்திலோ அல்லது விஞ்ஞானத்தில் தமிழ்மொழியை வளர்ப்பது தமிழர்களின் கையில்தான் உள்ளது. அம்மொழியை தாய்மொழியாகப் பேசும் மக்கள்தான் அக்கறை காட்டி பங்களித்து வளர்க்க வேண்டும். அதே நேரத்தில் இன்றையத் தொழில்நுட்ப உலகத்தில் ஒருவர் தங்களது அடையாளத்தை இழக்காமல் வாழ்ந்திட முடியும்.

வலைத்தளம் உருவாக்கம், கருத்து தெரிவிக்கும் போது, தமிழர்களுக்கு குறுஞ்செய்தி, மின்னஞ்சல் அனுப்பும் போது மொழியை இயல்பாக பயன்படுத்துவதில் தவறொன்றும் இல்லை. பலர் அவ்வாறு பயன்படுத்துகின்றனர். ஆனால் பலர் பயன்படுத்துவதில்லை. பயன்படுத்தாததற்கு பல்வேறு காரணிகள் இருக்கலாம்.

சிறுபான்மை மொழிகளின் சவால்கள் என்ன, அதற்கு தீர்வென்ன, பன்முகம் கொண்ட சமூகத்தில் எவ்வாறு பலமொழிகளுக்கு சம வாய்ப்பு வழங்கிட முடியும் மற்றும் இது போல மேலும் பல தலைப்புகளை அலசிப் பார்க்க – வேல்ஸில் அமைந்துள்ள கார்டிஃப் மெட்ரோபாலிட்டன் பல்கலைக்கழகத்தில் எதிர்வரும் ஜனவரி 24 தேதி அன்று மெய்நிகர் மாநாடு நடைபெறவுள்ளது.

இம்மாநாடு வெல்ஷ், ஆங்கிலம் மற்றும் தமிழில் நடைபெறுகிறது. பங்கேற்பாளர்கள் அவரவர் தாய்மொழி அல்லது விருப்பமொழிக்கேற்ப இம்மூன்று மொழிகளில் ஏதேனும் ஒரு மொழியில் தங்களின் கருத்துகளைச் சமர்ப்பிக்க இம்மாநாடு வாய்ப்பளிக்கிறது.

வெல்ஷ் மற்றும் தமிழ் இவ்விரெண்டு மொழிகளும் மிகப் பழமை வாய்ந்த மொழிகள் ஆகும். இரண்டுமே  சிறுபான்மை மொழிகள். எனவே இரண்டு சிறுபான்மை மொழிகள் எவ்வாறு ஆங்கிலம் போல் பெரும்பான்மை மொழிகளுடன் பயணிக்க முடியும் என்பதை மையமாகக் கொண்டு அமைகிறது இம்மாநாடு.

எவ்வாறு தமிழ்மொழியைத் தடையின்றி பயன்படுத்தலாம். அதே நேரத்தில் தமிழ்வழியில் பயின்றால் என்ன வாய்ப்பு கிடைக்கும் என்று கேட்கப்படும் கேள்விக்கு இம்மாநாடு ஒரு மேடையை அமைத்து கொடுக்கின்றது.

மாநாட்டில் பங்கேற்கக் கட்டணம் ஏதும் இல்லை. ஆர்வமுள்ள மாணவர்கள், தமிழ் ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள் கீழ்க்காணும் இணைப்பில் பதிவு செய்து பங்கேற்கலாம்:

https://cardiffmet.eu.qualtrics.com/jfe/form/SV_2tURuOXFSihf9AO