
இலண்டன்: மலேசிய ஊடகத் துறையிலும், குறிப்பாக இணைய செய்தித் தளமான மலேசியா டுடே ஊடகத்தைப் பிரபலமாக்கியதிலும் முக்கியப் பங்காற்றிய ராஜா பெத்ரா கமாருடின் பிரிட்டனின் மான்செஸ்டர் நகரில் தனது 74-வது வயதில் காலமானார்.
2008-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் தனது இணைய ஊடகமான மலேசியா டுடே மூலம் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமின் தலைமையிலான எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ததோடு, மேடைப் பிரச்சாரமும் செய்தார் ராஜா பெத்ரா. அந்தத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் அபார வெற்றி பெற்றன. அதைத் தொடர்ந்து ராஜா பெத்ராவும் பிரபலமானார்.
அவரின் மலேசியா டுடே இணைய ஊடகம் தொடர்ந்து பல சர்ச்சைக்குரிய விவகாரங்களையும், அரசாங்க ஊழல் விவகாரங்களையும் வெளியிட்டு வந்தது. ஒரு காலக்கட்டத்தில் அன்வார் இப்ராகிமுக்கு எதிராகத் திரும்பிய அவர் நஜிப் துன் ரசாக்கிற்கு ஆதரவாக செயல்பட்டார்.
அவர் மீது சில குற்றவியல் வழக்குகளும் மலேசியாவில் சுமத்தப்பட்டதைத் தொடர்ந்து நாட்டை விட்டு வெளியேறி பிரிட்டனில் தஞ்சமடைந்தார்.
எனினும் காலப்போக்கில் அவரின் பிரபலம் குறைந்தது. அவரின் செய்திகள் மீதான நம்பகத்தன்மையும் குறையத் தொடங்கியது.
ராஜா பெத்ரா திங்கட்கிழமை செப்டம்பர் 9-ஆம் தேதி பிரிட்டன் நேரப்படி இரவு 11.26 மணிக்கு மான்செஸ்டர் நகரில் காலமானார் என்பதை அவரின் சகோதரர் ராஜா இட்ரிஸ் உறுதிப்படுத்தியதாக பிரீ மலேசியா டுடே தெரிவித்தது.